search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் மெயினருவியில் குளிப்பதற்காக இன்று திரண்டிருந்த சுற்றுலா பயணிகள்.
    X
    குற்றாலம் மெயினருவியில் குளிப்பதற்காக இன்று திரண்டிருந்த சுற்றுலா பயணிகள்.

    குற்றாலம் அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

    விடுமுறை தினமான இன்று காலை முதலே மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்ந்தனர்.
    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 28.20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 21 மில்லிமீட்டர் மழையும் பதிவானது.

    இதேபோல் சேரன்மகாதேவி, பாபநாசம் உள்ளிட்ட இடங்களிலும், தென்காசி மாவட்டத்திலும் மழை பதிவானது. மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான இயல்பான சராசரி மழை அளவு 814.80 மில்லிமீட்டர் ஆகும். இந்தமாதம் 20-ந் தேதி வரை 185.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மாதத்திற்கான மழை அளவை கணக்கிடும் போது இயல்பான மழையை விட 2.32 சதவீதம் அதிகளவு மழை பெய்துள்ளது.

    விடுமுறை தினமான இன்று காலை முதலே மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்ந்தனர்.

    கொரோனா குறைந்ததால் தற்போது குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தற்போது தொற்று வெகுவாக குறைந்துவிட்டதால் முன்புபோல இரவிலும் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வந்தனர்.

    இதையடுத்து இரவில் குளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகமும், குற்றாலம் பேரூராட்சி அதிகாரியும் துரிதமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி மெயினருவி, ஐந்தருவி பகுதியில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் மட்டும் நாளை (திங்கட்கிழமை) முதல் இரவிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியிலும் இரவில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×