search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை விமான நிலையம்
    X
    சென்னை விமான நிலையம்

    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை 40 சதவீதம் உயர்வு

    கோடைகாலம் என்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, ‘வந்தே பாரத்’ மற்றும் ‘ஏர் பபுள்’ திட்டத்தில் மட்டும் இயங்கி வந்தது.

    இந்நிலையில் தற்போது நோய் பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் தளர்த்தி உள்ளது. இதையடுத்து வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.

    கொரோன கட்டுப்பாடு தளர்வுகளால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவையில் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை மூலம் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 441 ஆக உயர்ந்து உள்ளது. விமான சேவையும் 9 ஆயிரத்து 66 ஆக அதிகரித்து உள்ளன.

    கடந்த ஜனவரி மாதத்தில் விமான சேவை 7ஆயிரத்து 751 ஆகவும் பயணிகள் எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 703 ஆகவும் இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் விமான சேவை 6 ஆயிரத்து 496 ஆகவும் பயணிகள் எண்ணிக்கை 9 லட்சத்து 14 ஆயிரத்து 793ஆகவும் இருந்தது.

    பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பின்னர் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமானத்தின் எரிபொருளின் விலை உயர்ந்ததால், டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது. அப்படி இருந்தும் கோடைகாலம் என்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    வர்த்தக ரீதியாக செல்வோர் எண்ணிக்கை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதனால் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய மெட்ரோ நகரங்களுக்கு பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேபோல் மற்ற நகரங்களுக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

    வெளிநாட்டு விமான சேவையை பொருத்தவரை கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாவுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஏர் பிரான்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் விமான சேவைகளை தொடங்கியிருக்கிறது. இனி வரும் நாட்களில் அந்த நிறுவனங்களின் சேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×