search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகளின் வாகனம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்
    X
    அதிகாரிகளின் வாகனம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்

    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு நிலம் அளவீடு: அதிகாரிகள் காரை வழிமறித்து கிராமமக்கள் போராட்டம்

    கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்க கூடாது என்றுகிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். எனினும் அதிகாரிகள் சாலை அமைக்கும் ஆரம்பகட்டபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3,200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகைபேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

    இந்த சாலை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 700 ஏக்கர் நிலப்பரப்பில் விளைநிலங்கள், கோவில்கள், அரசுப் பள்ளி கட்டிடங்கள், 200க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் பாதிப்பு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்க கூடாது என்றுகிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். எனினும் அதிகாரிகள் சாலை அமைக்கும் ஆரம்பகட்டபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 136 கிலோ மீட்டர் தூரம் அமையஉள்ள இந்த சாலையை பல்வேறு குத்தகைதாரர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஊத்துக்கோட்டையில் இருந்து கன்னிகைபர் வரை 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி ஆந்திராவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை சேர்ந்த நிலம் அளவீடு அதிகாரிகள் பருத்திமேனிகுப்பம் கிராமத்துக்கு வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் கிராமமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அவர்கள், அதிகாரிகளை கிராமத்துக்குள் நுழையவிடாமல் காரை வழிமறித்து அதன் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது கிராமமக்கள் கூறும்போது, 6 வழிச்சாலை அமைக்க நாங்கள் நிலங்கள் இன்னும் ஒப்படைக்காத பட்சத்தில் எதற்காக அளவீடு செய்ய வந்தீர்கள் என்று கேள்வி கேட்டு அதிகாரிகளை திக்குமுக்காட செய்ய வைத்தனர். இதனால் செய்வது தெரியாமல் திகைத்த அதிகாரிகள் நில அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×