search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை

    கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வரத்து அதிகரித்து இருப்பது அதன் விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது.
    கோவை:

    கோவை புறநகர் பகுதிகளான பேரூர், செட்டிப்பாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், இக்கரைபோளுவாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர்.

    60 முதல் 65 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய சின்னவெங்காயம் ஏக்கருக்கு 5 முதல் 6 டன் வரை விளையக்கூடியவை. பருவமழை, சீதோஷ்ணநிலை காரணமாக நடப்பு பருவத்தில் சின்னவெங்காயம் மகசூல் அதிகரித்தது.

    சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெங்காயத்தின் விலை சரிந்து தற்போது கிலோ ரூ.14 முதல் ரூ.18 வரை விற்பனை ஆகிறது. ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் இந்த விலை வீழ்ச்சியால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் தீத்திபாளையம் பெரியசாமி கூறியதாவது:-

    முன்பெல்லாம் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் சின்னவெங்காய சாகுபடியை தொடங்குவோம். தற்போது, எல்லா பருவங்களிலும் சாகுபடி செய்யும் பயிராகமாறி விட்டது. மேலும், வாழை, தென்னை, மஞ்சள் போன்றவற்றின் ஊடுபயிராகவும் சின்னவெங்காய சாகுபடி பரப்பு அதிகரித்ததால் மகசூலும் அதிகரித்துள்ளது.

    ஒட்டன்சத்திரம், தாராபுரம் பகுதிகளில் நாற்று வாங்கி நடுவதால் உயர்ரக ஒட்டு ரகங்களில் விளைச்சல் அமோகமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வரத்து அதிகரித்து இருப்பது அதன் விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது.

    தற்போது வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.8-க்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டு கிலோ ரூ.70 வரை விற்ற நிலையில் இந்த விலை சரிவு விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்வதோடு, விவசாயிகளுக்கு மானியம் வழங்கிட முன்வர வேண்டும்.

    அரசே நேரடியாக வெங்காயத்தை கிலோ ரூ.50-க்கும் கொள்முதல் செய்தால் விவசாயிகள் நஷ்டமடைய மாட்டார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.

    வேளாண் விற்பனைக் குழு மூலம் கொள்முதல் செய்து மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் வெங்காயவடகம் போன்ற மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.

    தற்போது தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 லட்சம் டன் வெங்காயம் இருப்பு உள்ளது. உரிய விலைகிடைக்காத நிலையில் இவற்றை விவசாயிகள் பட்டறை போட்டு சேமித்து வருகின்றனர். 120 நாட்கள் வரை மட்டுமே சேமிக்க முடியும். அதற்குள் உரிய விலை கிடைத்தால் விவசாயிகள் நிம்மதி அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×