search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 54 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்றும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டும் தான் கல்வி பயிற்றுவிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை விட பெரிய தலைகுனிவு தமிழர்களுக்கு இருக்க முடியாது.

    இந்தியிடமிருந்து தமிழைக் காப்பாற்றுவதற்காக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தி, ஏராளமான உயிர்களை தியாகம் செய்த தமிழ்நாட்டில் தமிழக அரசு நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை நினைக்கவே கவலையாக உள்ளது. இத்தகைய நிலையை ஏற்படுத்தியது அரசு தான் என்பது வேதனை அளிக்கிறது.

    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி இல்லாதது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு அவர் அளித்த விளக்கம் விசித்திரமாக உள்ளது. “54 அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பது தவறு; தமிழ் வழி வகுப்புகளை ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை. அனைத்து மாணவர்களும் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர் என்பது தான் சரி” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

    இது தமிழக அரசின் தவறை முற்றிலுமாக மறைத்துவிட்டு, மாணவர்கள் மீது பழி போடும் செயலாகும்.

    தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியை கட்டாயமாக்குவதற்கு பதிலாக, அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி திணிக்கப்பட்டது தான் இந்த நிலைக்கு காரணமாகும்.

    2006-11 தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வலிந்து திணிக்கப்பட்டது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அதனால், அரசு பள்ளிகள் உட்பட 50000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக இருக்கிறது. அதையும் கடந்து தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது.

    1970-ம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அறிவியல் படிப்புகளை தமிழ் மொழியில் நடத்த அப்போதைய கலைஞர் அரசு ஆணையிட்டது. ஆனால், தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்று கூறி சில அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், அந்த முடிவை கலைஞர் அரசு திரும்பப்பெற்றது.

    அதனால், அறிவியல் சொற்களை தமிழில் உருவாக்க முடியாமல் போய்விட்டது என்று 1975-ம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது கலைஞர் வேதனை தெரிவித்தார். பள்ளிக்கல்வியிலும் அத்தகைய நிலை ஏற்படுவதற்கு தமிழக அரசு வழிவகுக்கக்கூடாது.

    தாய்மொழிவழிக் கல்வி எதற்கும் குறைந்ததல்ல. சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலகில் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்தி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×