search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவிச்சந்திரன் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது எடுத்த படம்.
    X
    ரவிச்சந்திரன் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது எடுத்த படம்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த ராஜீவ்காந்தி கொலை கைதி ரவிச்சந்திரன்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி ரவிச்சந்திரன் திடீரென மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மதுரை:

    அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி, மதுரை மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தாயார் ராஜேஸ்வரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கப்பட்டது.

    எனவே அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அவல் சூரப்பன்நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். ரவிச்சந்திரனுக்கான பரோல் காலம் 2 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு கடந்த மாதம் திடீர் மாரடைப்பு மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை போலீசார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயவியல் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். அதன் பிறகு ரவிச்சந்திரன் மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் அவர் இன்று காலை போலீஸ் வாகனத்தில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் அவரிடம் முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் இதயவியல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி ரவிச்சந்திரன், திடீரென மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனை ஆஸ்பத்திரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
    Next Story
    ×