search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பீட்ரூட் சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் - விவசாயிகள் எதிர்பார்ப்பு

    பீட்ரூட் காய் மற்றும் அதன் இலைகள் மருத்துவ குணம் மிக்கதாகும்.
    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரம் மொடக்குப்பட்டி, தளி, கணபதிபாளையம், ராகல்பாவி, போடிபட்டி, வாளவாடி, வல்லக்குண்டாபுரம், அய்யம்பாளையம், கொங்கல்நகரம், மலையாண்டிகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பல ஆயிரம் ஏக்கரில் பீட்ரூட் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இப்பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை, களிமண் வளம், சொட்டு நீர் பாசன முறை ஆகிய காரணங்களால் பீட்ரூட் விளைச்சல் பிற பகுதிகளை விட அதிகம் உள்ளது.ஏக்கருக்கு, 7 கிலோ விதைகள் வீதம் நடவு செய்யப்பட்டு 14 டன் வரை விளைச்சல் எடுக்கப்படுகிறது.

    மலைப்பகுதியில் மட்டும் விளையும் என பெயர் பெற்ற பீட்ரூட் சாகுபடியை மேற்கொள்ள உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்நிலையில் பல்வேறு காரணங்களால் பீட்ரூட் காய்களுக்கு போதிய விலை கிடைக்காமல் 90 நாட்கள் சாகுபடிக்கு செய்த செலவு கூட கிடைக்காமல்  விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். பீட்ரூட் காய் மற்றும் அதன் இலைகள் மருத்துவ குணம் மிக்கதாகும். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பீட்ரூட் பயிரிடப்படுகிறது. உடுமலை பகுதியில்  விளையும், பீட்ரூட் திரட்சியாகவும், சத்துகள் மிகுந்தும் காணப்படுகிறது. காய்களிலிருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வாய்ப்புள்ளதாக, வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதில் பீட்ரூட்டிலிருந்து உடனடி பானம், இனிப்பு ஊறுகாய் ஆகியவை தயாரிக்கலாம் என வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இப்பொருட்களை தயாரிக்க முடியவில்லை.

    தரமான விதை, வழிகாட்டுதல், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு பயிற்சி ஆகியவற்றை தோட்டக்கலைத்துறை வாயிலாக வழங்கினால், உடுமலை பகுதியில்  பீட்ரூட் சாகுபடி பரப்பை பல மடங்கு அதிகரிக்க முடியும். நிரந்தர வருவாயும் கிடைக்கும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×