search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெடிவிபத்தால் தரைமட்டமான கட்டிடம்
    X
    வெடிவிபத்தால் தரைமட்டமான கட்டிடம்

    வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு- பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

    கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்ததையடுத்து, ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூவ் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். (வயது50). இவர் காமநாயக்கன் பட்டியை அடுத்துள்ள துறையூரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

    இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். பட்டாசு ஆலையில் சுமார் 50 தனித்தனி கட்டிடங்கள் செயல்பட்டு வருகிறது.

    நேற்று பிற்பகலில் பட்டாசு ஆலையின் கடைசி கட்டிடத்தில் தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மருந்து கலவையை எடுத்து வந்து கொட்டும்போது உராய்வு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

    அப்போது ஈராய்ச்சி மேலத்தெருவைச் சேர்ந்த ராமர் (63), ஜொட்டாம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் (52) மற்றும் இயற்கை உபாதைக்கு சென்ற சிவந்திபட்டி குமாரபுரம் வடக்கு தெருவை சேர்ந்த தங்கவேல் (45), நாலாட்டின்புதூரை சேர்ந்த கண்ணன் என்ற மாரிமுத்து (54) ஆகிய 4 பேரும் உடல் சிதறியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஆர்.டி.ஓ. சங்கரநாராயணன், டி.எஸ்.பி. உதயசூரியன் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    மேலும் உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கொப்பம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பட்டாசு ஆலை சார்பாக நிவாரண தொகை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. சங்கரநாராயணன் தலைமை யில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.

    இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 6 லட்சமும், இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாகவும் பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறும்போது, இந்த சம்பவம் வருந்தத்தக்கது. உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விபத்து தொடர்பாக துறையூர் கிராம நிர்வாக அலுவலர் அந்தோணி செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலை உரிமையாளர் பிரபாகரன், மேலாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர்கள் திருநாவுக்கரசு, சூசை மிக்கேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் 4 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 304ஏ, 286, 9பி, 1ஏ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×