search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூரில் போதையால் அரங்கேறும் குற்றச்சம்பவங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    கடந்த 21-ந்தேதி காட்டன் மார்க்கெட்டில் அரியலூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூரில் 8.75 லட்சம் பேர் வசிக்கின்றனர். பனியன் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர். 

    சமீபகாலமாக, திருப்பூரில் திருட்டு,கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

    கடந்த 6-ந்தேதி வெள்ளியங்காடு பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொல்லப்பட்டு, உடலை ‘சூட்கேஸில்’ அடைத்து தாராபுரம் ரோட்டில் உள்ள கால்வாயில் தூக்கி வீசி சென்றனர். 

    இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள கணவரை தேடி வருகின்றனர். கடந்த 13-ந்தேதி செரங்காடு, எம்.பி., நகர் பகுதியில்  மதுபோதையில் இருந்த  இரு தரப்புக்கு இடையே கஞ்சா கேட்டது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் வாலிபர் சதீஷ் என்பவரை தலையை துண்டித்து குப்பை தொட்டியில் வீசியும் சென்றனர். இதில் 7 பேரை கைது செய்த போலீசார் ஒருவரை தேடி வருகின்றனர்.

    கடந்த 21-ந்தேதி காட்டன் மார்க்கெட்டில் அரியலூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட வாலிபர், கடந்த ஒரு வாரமாக நண்பர்கள் சிலருடன் காட்டன் மார்க்கெட்டில் வளாகத்தில், தூங்கி பெயின்டிங் வேலை செய்து வந்தார். 

    மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். அங்கிருந்த கடைக்காரர்கள், ஸ்ரீதருடன் மது அருந்தும் நண்பர்கள், வேலை செய்பவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த ஜனவரி 24-ந்தேதி, ஊத்துக்குளியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பிறந்தநாளையொட்டி மது அருந்தி விட்டு புதுப்பாளையம் அருகே சென்ற போது போதையில் பொதுமக்கள் சிலருடன் தகராறு ஏற்பட்டது. கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதி கொண்டனர். 

    இதில் 4 பேர் காயமடைந்தனர். தாக்குதல் தொடர்பாக, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 5 பேரை நல்லூர் போலீசார் கைது செய்தனர். 

    இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு குற்றச்சம்பவங்கள்  நிகழ்கிறது. 

    நேற்று தாராபுரம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டி மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளனர். 

    வார இறுதி நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழமை ‘டாஸ்மாக்‘ மதுக்கடை அருகே  பிரதான ரோடுகள், மக்கள் அதிகம் கூடும் இடத்தில் போதை ஆசாமிகள் கண் மூடித்தனமாக அடிக்கடி மோதி கொள்கின்றனர். 

    குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வீதிகளில் போதை ஆசாமிகள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகராறு செய்வது, சாலையில் உருண்டு சண்டை போடுகின்றனர். 

    எனவே இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் போலீஸ் கமிஷனர் தலையிட்டு ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் போலீஸ் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    திருப்பூரில் பிரதான ரோடுகளில், சந்திப்புகளில் மதுக்கடைகள் இருக்கின்றன.

    பின்னலாடை தொழில் அமைப்பினர் பலர் திருப்பூரில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்‘’ என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால் இந்தக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மதுக்கடைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும், மது விற்பனையை அதிகரிப்பதற்குமான நடவடிக்கைகள் தான் தொடர்கின்றன. 

    மதுக்கடையை அகற்றுவதற்கு நீதிமன்றம் வரை சென்று பொதுமக்கள் போராடும் நிலை இருக்கிறது. திருப்பூரில் நடைபெறும் பல குற்றச்சம்பவங்களின் பின்னணியில் ‘போதை’ தான் காரணமாக இருக்கிறது. 

    எனவே அதனை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.  
    Next Story
    ×