search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    திருவல்லிக்கேணியில் தி.மு.க. பிரமுகர் கொலை- 7 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

    வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில் நேற்று இரவு திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பல்லவன் சாலை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். 36 வயதான இவர் அ.தி.மு.க.வில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் தி.மு.க.வில் சேர்ந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர் தலில் அந்த பகுதியில் தீவிரமாக கட்சி பணியையும் அவர் மேற்கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று காலை காந்தி நகர் பகுதியில் அடகு கடை அருகில் நின்று மதன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கையில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. மதனை அனைவரும் சுற்றி வளைத்தனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மதன் அங்கிருந்து ஓடுவதற்கு முற்பட்டார். ஆனால் 7 பேரும் சூழ்ந்துக் கொண்டு மதனை சரமாரியாக வெட்டினார்கள். இதில் மதனுக்கு உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து பலியானார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உதவி கமி‌ஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கொலையாளிகள் யார்? என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அளித்த தகவலின் பேரில் இன்று அதிகாலையில் கொலை கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண் தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. பிடிபட்ட 4 பேரில் ஒருவர் தனது தாயுடன் மதன் தவறாக பழகி வந்ததாகவும் அதன் காரணமாக கொலை செய்ததாகவும் கூறி உள்ளார்.

    கொலையாளிகள் 7 பேரில் ஒருவர் இன்னொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசியல் தகராறு காரணமாக இந்த கொலை நடைபெறவில்லை என்று விசாரணையில் உறுதியானது.

    கொலையாளிகள் 7 பேரில் மதனின் உறவினர்கள் சிலரும் உள்ளனர். இதனால் மதன் கொலைக்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    பிடிபட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு மேலும் 3 பேரும் சிக்கினார்கள். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதனுடன் தொடர்பில் இருந்த பெண் துப்புரவு தொழிலாளியாக இருப்பதும், அந்த பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாகவே அவரது மகன் ஆட்களை திரட்டி இந்த கொலையை செய்து இருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இருப்பினும் பல்வேறு நபர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதால் வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார் இன்று மாலை கொலைக்கான காரணத்தை விரிவாக தெரிவிக்க உள்ளதாக கூறினார்கள்.

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் நேற்று இரவு திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரசியல் தகராறு காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் முதலில் கருதினார்கள்.

    விசாரணைக்கு பிறகு அதுபோன்ற எந்த காரணங்களும் இல்லை என்று தெரிய வந்தது. இருப்பினும் திருவல்லிக்கேணி பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×