search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பிரியாணி ஆர்டர்கள் குவிந்தன

    திருப்பூர் காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோட்டில் உள்ள பிரியாணி கடைகளில் காலை 10 மணியில் இருந்தே அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.
    திருப்பூர்:

    தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஏஜெண்டுகளுக்கு வேட்பாளர்கள் மற்றும் கட்சி சார்பில் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் உணவுக்கான ஆர்டர்கள் குவிந்தன. குறிப்பாக பிரியாணி ஆர்டர்கள் அதிக அளவு குவிந்தன. சிலஇடங்களில் தயார் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.  

    திருப்பூர் காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோட்டில் உள்ள பிரியாணி கடைகளில் காலை 10 மணியில் இருந்தே அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. ஏஜெண்டுகள், கட்சிக்காரர்களுக்கு வழங்குவதற்காக பிரியாணி பார்சல்களை அதிக எண்ணிக்கையில் வாங்கி சென்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் இன்று பிரியாணி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

    இதுகுறித்து  ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறுகையில்:

    தேர்தல் என்றாலே அதில் பிரியாணியும் சேர்ந்து விடும். உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து பிரசாரத்திற்கு செல்பவர்களுக்கு வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் சார்பில் பிரியாணி வாங்கி கொடுக்கப்பட்டது. இன்று வாக்குப்பதிவு என்பதால் அதிக அளவு ஆர்டர்கள் வந்தன. நேற்றே பலர் ஆர்டர் செய்து விட்டனர்.   

    இதனால் நேற்றிரவு முதலே பிரியாணி தயாரிப்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். காலையிலேயே பிரியாணி தயார் செய்து வழங்கி விட்டோம் என்றார். இதேப்போல் சைவ ஓட்டல்களிலும் இன்று விற்பனை ஜோராக நடைபெற்றது. 

    இதேப்போல் மட்டன்-சிக்கன் விற்பனையும் இன்று அமோகமாக நடைபெற்றது. வேட்பாளர்கள் சிலர் கடையில் வாங்கினால் அதிகம் செலவாகும் என்பதால் உணவை தாங்களே தயார் செய்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கினர். 

    சுயேட்சை வேட்பாளர்களும் ஓட்டல் மற்றும் வீடுகளிலேயே உணவை தயார் செய்தனர். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி அவர்கள் செயல்பட்டனர். பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் அசைவ சாப்பாடு விரும்பியதால் மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்டவற்றை வாங்கி சமைத்து கட்சிக்காரர்களுக்கு வழங்கினர். 
    Next Story
    ×