search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பருவத்துக்கு ஏற்ற விதை ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் - விற்பனையாளர்களுக்கு உத்தரவு

    சாகுபடிக்கு தேவையான விதைகளை, தனியார் விற்பனையாளர்களிடம் விவசாயிகள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
    உடுமலை:

    வடகிழக்கு பருவமழைக்கு பிறகு உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில், காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம், பெதப்பம்பட்டி, கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, வடசித்தூர், பொள்ளாச்சி பகுதிகளில் கொடி வகை ரகங்களும், தக்காளி, கத்தரி, மிளகாய், காலிபிளவர் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இச்சாகுபடிக்கு தேவையான விதைகளை, தனியார் விற்பனையாளர்களிடம் விவசாயிகள் வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது. எனவே இந்த பருவத்துக்கு செல்லத்தக்கது என விபர அட்டைகளில் விதை உற்பத்தி நிலையங்களால் குறிப்பிடப்பட்ட விதை ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இந்த நடைமுறையை  மார்ச் முதல் மே மாதம் வரை விற்பனை நிலையங்களிலும், நாற்று பண்ணைகளிலும் பின்பற்ற வேண்டும்.

    கோடை காலத்துக்கு உகந்தது என குறிப்பிடப்படாத விதை குவியல்களை விவசாயிகள் சாகுபடி செய்தால் முளைப்புத்திறன் குறைதல், பூக்கள் குறைதல், பயிரின் தன்மையில் மாறுபாடு ஆகிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதை தவிர்க்க பருவத்துக்கு உகந்தது என குறிப்பிடப்பட்டுள்ள விதை குவியல்களையே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இவ்வகை விதை குவியல்களை பருவத்துக்கு மாறாக இருப்பு வைக்கப்பட்டிருந்தால் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு தக்க சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×