search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    திருவள்ளூர் மாவட்டத்தில் 264 இடங்களில் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி காணொலியில் பிரசாரம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் கடைசி நாள் பிரசாரத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்கிறார். அவர் அன்று காணொலியில் பேசுவதற்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    தேர்தலில் 100 சதவீத வெற்றி பெறும் அளவுக்கு தி.மு.க. வியூகம் அமைத்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    தி.மு.க. தலைவரான முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்த படி காணொலி காட்சி வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசாரம் செய்து வருகிறார். மதசார்பற்ற கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்று ஆட்சிக்கு வந்து இதுவரை செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு பிரசாரம் செய்கிறார்.

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்கிறார். மு.க. ஸ்டாலினின் பிரசாரத்தை அந்தந்த மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதியிலும் எல்.இ.டி. பெரிய திரையில் ஒளிபரப்பி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி

     

    கடந்த 6-ந்தேதி கோவை மாவட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலினின் பிரசாரத்தை 450 இடங்களில் ஒளிபரப்பி உள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் சுமார் 1000 பேர் வரை அமர்ந்து பிரசாரத்தை கேட்டுள்ளனர்.

    7-ந்தேதி சேலம், 8-ந்தேதி கடலூர், 9-ந்தேதி தூத்துக்குடி, 10-ந்தேதி ஈரோடு, 11-ந் தேதி கன்னியாகுமரி, 12-ந் தேதி திருப்பூர் மாவட்டங்களில் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) திண்டுக்கல் மாவட்டத்தில் காணொலி வாயிலாக பேசுகிறார்.

    14-ந்தேதி மதுரை மாவட்டம், 15-ந்தேதி தஞ்சை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு பிறகு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் 16-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரான பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி மாலை 6 மணியளவில் காணொலி வாயிலாக திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

    இந்த நிகழ்ச்சி 264 இடங்களில் மிகப்பெரிய திரை அமைத்து ஒளிபரப்பு செய்யப்படும். இதில் சுமார் 2 லட்சம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர்.

    மாநகர, நகர, பேரூர் செயலாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஒவ்வொரு பகுதியிலும் எல்.இ.டி. பேனல்கள் மற்றும் ஒலி, ஒளி அமைப்புகளை நிறுவி நேரலையாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரசாரத்தை ஒளிபரப்பு செய்து பொது மக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    16-ந்தேதி (புதன்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்யும் மு.க. ஸ்டாலின் அன்றைய தினம் காலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் பிரசாரம் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இதே போல் சென்னையிலும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “16-ந்தேதி காலையில் மு.க.ஸ்டாலின் சென்னை அல்லது புறநகர் பகுதியில் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் கடைசி நாள் பிரசாரத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்கிறார். அவர் அன்று காணொலியில் பேசுவதற்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதையும் படியுங்கள்... ஒரே நாடு... ஒரே ரேசன் கார்டு... என்பவர்கள் ஒரே குளம்... ஒரே சுடுகாடு... கொண்டு வாருங்கள்: சீமான்

    Next Story
    ×