search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோர்ட்டு உத்தரவை பின்பற்றி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் பேட்டி

    விவசாய தொழில் சிறக்க வேண்டி தை பொங்கல், மாட்டு பொங்கல் உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    பல்லடம்:

    உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைமை அலுவலகமான பல்லடம் அடுத்த கோடங்கிபாளையத்தில் பொங்கல் விழா நடந்தது. மாநில தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். 

    மாநில செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. 

    அப்போது செல்லமுத்து கூறியதாவது:

    விவசாய தொழில் சிறக்க வேண்டி தை பொங்கல், மாட்டு பொங்கல் உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயத் தொழில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

    அவ்வகையில் விவசாய தொழிலுக்கு தண்ணீரே ஆதாரமாக உள்ளது. ஆண்டுதோறும் பருவ மழைகள் கிடைத்தபோதும், அவற்றை சேமிப்பதற்கு உண்டான கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. 

    முன்னோர்கள் உருவாக்கி வைத்த குளம் குட்டைகள் நீர் நிலைகள் உள்ளிட்டவை காலம் காலமாக ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து வருகின்றன. இவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாததால் வறட்சியான காலகட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன், வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

    கோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முகாந்திரம் இல்லை.கடந்த காலங்களை போன்று கோர்ட்டு உத்தரவு கானல் நீராகி விடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. 

    கோர்ட்டு உத்தரவை பின்பற்றி தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×