என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  வீணாகும் தண்ணீரை சேமிக்க அமராவதி ஆற்றில் கூடுதல் தடுப்பணைகள்- விவசாயிகள் எதிர்பார்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மேற்கு தொடர்ச்சிமலையிலுள்ள 946 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.
  உடுமலை:

  உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை 1957-58 ம் ஆண்டுகளில் கட்டப்பட்டு 1958 டிசம்பர் 1-ந்தேதி பயனுக்கு வந்தது. 4 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணை தென் மேற்கு பருவ மழை, வட கிழக்கு பருவ மற்றும் கோடை மழை என ஆண்டுக்கு, 10 டி.எம்.சி.,நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

  அணையின் நீர் பிடிப்பு பகுதிகள்  மேற்கு தொடர்ச்சிமலையிலுள்ள 946 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். கேரளா மாநிலம் தலையாறிலிருந்து உற்பத்தியாகும் பாம்பாறு, மேற்கு பகுதியிலிருந்து வரும் சின்னாறு, கிழக்கு பகுதியிலிருந்து வரும் தேனாறு ஆகியவை  கூட்டாறாக இணைந்தும் மற்றும் சிற்றாறுகள் வாயிலாகவும் அணைக்கு நீர் வரத்து உள்ளது.

  அமராவதி அணையில் துவங்கி 148 கி.மீ., தூரம் பயணம் செய்து வழியோர கிராமங்களை வளம் கொழிக்கச்செய்யும் அமராவதி ஆறு, கரூர் திருமுக்கூடலூரில் காவிரியுடன் இணைகிறது. அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 29,387 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள், 25,250 ஏக்கர் நிலங்கள் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் என 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

  மேலும் வழியோரத்திலுள்ள நூற்றுக்கணக்கான குடிநீர் திட்டங்களுக்கும் ஆதாரமாக உள்ளது. கடந்தாண்டு தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழையின் போது 18 டி.எம்.சி., வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 

  ஆனால் தற்போது ஆற்றில் பெரும்பாலான பகுதிகள் வறண்டு பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் மட்டும் சென்று கொண்டுள்ளது. ஆண்டு தோறும் அணை நிரம்பி  உபரியாக நீர் வெளியேற்றப்படும் நிலையில் அவற்றை முறையாக சேமித்து வறட்சி காலங்களில் பயன்படுத்தும் வகையில் தடுப்பணைகள் இல்லை. 

  உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூர் தாலுகாவில், பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திருப்பும் வகையில் 28 தடுப்பணைகள் உள்ளன.அவையும் முறையாக பராமரிக்காமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. 

  விவசாயிகள்  தென்னை மட்டைகள் அமைத்தும், மணல் மூட்டைகள் அடுக்கி நீரை தடுத்து வாய்க்கால்களில் நீர் எடுத்து வருகின்றனர். 

  ஆண்டு தோறும் பல டி.எம்.சி., தண்ணீர் வீணாகும் நிலையில் கூடுதல் தடுப்பணைகள் கட்டினால் வறட்சி காலங்களில், குடிநீர், விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மட்ட உயர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும்.148 கி.மீ., உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே தாராபுரம், புதுப்பை, தாளக்கரை உள்ளிட்ட ஆறு இடங்களில் மட்டுமே தடுப்பணைகள் உள்ளன. 

  எனவே உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகள் உட்பட தேவையான அனைத்து பகுதிகளிலும் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். 

  பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்களுக்களுக்கு நீர் திருப்பும் வகையில் அமைந்துள்ள பழைய தடுப்பணைகளில் கூடுதல் நீர் தேக்கும் வகையில், புதிய தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: - ஆண்டு தோறும் அமராவதி அணை நிரம்பினாலும் மழை நீரை சேமிக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் இல்லை. மழைக்காலங்களில்  ஒரு நாளில் பல டி.எம்.சி., தண்ணீர் வீணாகிறது.

  ஆற்றில் இருந்த மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் மழைக்காலங்களில் மட்டும் ஆற்றில் நீர் இருக்கும். மழைக்காலம் முடிந்ததும் ஆறு வறண்டு விடுகிறது. ஒரு காலத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி இருந்த நிலையில் தற்போது ஒரு போக சாகுபடியாக குறைந்துள்ளது. 

  எனவே ஆற்றின் குறுக்கே தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் மழை காலங்களில் கிடைக்கும் நீரை வழியோரங்களில் சேமித்து ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும். ஆற்றில் நீர் இருப்பும், விவசாயம் மற்றும் குடிநீருக்கு பிரச்சினை ஏற்படாது. 

  இவ்வாறு விவசாயிகள் கூறினர்.  
  Next Story
  ×