search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க வீரர்கள் முயன்ற காட்சி.
    X
    வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க வீரர்கள் முயன்ற காட்சி.

    நவலூர் குட்டப்பட்டில் இன்று ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- அனுமதி தர தாமதமானதால் பரபரப்பு

    ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள வந்த 400 வீரர்களில் 150 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் சுழற்சி முறையில் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
    திருச்சி:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் முதலாவதாக புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.

    இதையடுத்து மதுரை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 3 இடங்களான அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதே போல் திருச்சி மாவட்டத்தில் பொங்கலுக்கு மறுநாள் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இன்று விழாக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. தொடர் விடுமுறை காரணமாக ஜல்லிக்கட்டுக்கான அரசு ஆணை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் காளைகளை கொண்டு வந்து போட்டியாளர்கள் இறக்க ஆரம்பித்தனர். ஆனால் 10 மணி வரை ஜல்லிக்கட்டுக்கான அனுமதி தரப்படவில்லை. சுமார் 10.25 மணிக்கு அனுமதி பெறப்பட்ட நிலையில் அதன் பின்னர் இதில் 300 மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

    மேலும் இப்போட்டியில் கலந்துகொள்ள வந்த 400 வீரர்களில் 150 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் சுழற்சி முறையில் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை கண்டு பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர். இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியினை மணிகண்டம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாத்தூர் கருப்பையா தொடங்கி வைத்தார். டி.ஐ.ஜி. சரவணசுந்தர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


    Next Story
    ×