search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைனில் பதிவு செய்ய இ-சேவை மையத்தில் காத்திருந்த மாடுபிடி வீரர்கள்
    X
    ஆன்லைனில் பதிவு செய்ய இ-சேவை மையத்தில் காத்திருந்த மாடுபிடி வீரர்கள்

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள்-காளைகளுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இ-சேவை மையங்களில் திரண்டனர். அவர்கள் காலையிலேயே பதிவு செய்ய தேவையான ஆவணங்களுடன் இ-சேவை மையங்களில் காத்திருந்ததை காண முடிந்தது.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள். இதனை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.

    மேலும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பங்கேற்பது தனிச்சிறப்பு. அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகை அன்றும், பாலமேட்டில் அதற்கு மறுநாளும், 3-வது நாளில் அலங்காநல்லூரிலும ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை அதன் உரிமையாளர்கள் பல மாதங்களுக்கு முன்பே தயார்படுத்த தொடங்கி விடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே காளைகளுக்கு ஓட்டம், நீச்சல், மண்ணை குத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிப்பார்கள்.

    அதேபோன்றுதான் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவி வருவதால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு வழக்கம்போல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

    அதன்படி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும், அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும், பங்கேற்கும் வீரர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் போட்டி நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உள்ளூர் பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும், வெளிமாவட்டத்தினர் மற்றும் பிற பகுதியினருக்கு அனுமதி கிடையாது, ஒரு போட்டியில் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், ஒரு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றொரு போட்டியில் பங்கேற்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மாடுபிடி வீரர்களுக்கும், கலந்து கொள்ளும் காளைகளுக்கும் ஆன்லைனிலேயே பதிவு செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழகிய உதவியாளர் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஷ்ஷ்ஷ்.னீணீபீuக்ஷீணீவீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என்றும், மேலும் ஆன்லைன் பதிவு இன்று தொடங்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதி நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது.

    ஆன்லைன் பதிவிற்கு மாடுபிடி வீரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயது சான்றிதழ், கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாடுபிடி வீரர்கள் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இணைய தளத்தில் ஆன்லைனில் பதிவு செய்தனர்.

    இதற்காக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இ-சேவை மையங்களில் திரண்டனர். அவர்கள் காலையிலேயே பதிவு செய்ய தேவையான ஆவணங்களுடன் இ-சேவை மையங்களில் காத்திருந்ததை காண முடிந்தது.

    மேலும் போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அதன் உரிமையாளர்கள் ஆன் லைனில் பதிவு செய்தார்கள்.

    ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அதில் தகுதியான நபர்களுக்கு மட்டும் போட்டியில் பங்கேற்பதற்கான டோக்கன் அனுப்பப்படும். அதனை மாடுபிடி வீரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த டோக்கனை வைத்திருப்பவர்கள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவார்கள்.

    Next Story
    ×