search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
    X
    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் மூடல்

    கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக அரசு உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று மூடப்பட்டன. கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
    மதுரை

    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையின் போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.  இந்நிலையில் தற்போது ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் தினசரி தொற்று பாதிப்பு 50 தாண்டிவிட்டது. 

    தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு  நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. 

    மேலும் கோவில்கள் சர்ச்சுகள் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலானது. மேலும் வழிபாட்டுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் இன்று மூடப்பட்டன.  மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் இன்று மூடப்பட்டன. இதனால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். 

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று முதல் கோவிலுக்கு செல்ல தடை அமலுக்கு வந்ததால் கோவில் வாயில்கள் மூடப்பட்டன. 

    வழக்கத்தை விட மிகக் குறைவான அளவில் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டு சென்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலுக்கு வெளியே வாசலில் முன்பு நின்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பிச் சென்றனர். 

    இதேபோல் மதுரை கள்ளழகர் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில், மதனகோபால சுவாமி கோவில், பேச்சியம்மன் கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில், ஒத்தக்கடை நரசிங்கபெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சோலைமலை முருகன் கோவில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில், ஒத்தக்கடை ஆஞ்சநேயர் கோவில் ஆகிய முக்கிய தலங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
    அனைத்து கோவில் களின் நுழைவு வாயில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. மதுரையில் 100-க்கும் மேற்பட்ட முக்கிய ஆலயங்கள் உண்டு. எனவே இதற்கு ‘கோவில் நகரம்‘ என்ற மற்றொரு பெயரும் உண்டு. இங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடப்பது வழக்கத்தில் உள்ளது.

    அதிலும் குறிப்பாக தல்லாகுளம் வெங்கடேசபெருமாள் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் ஆகிய வைணவ தலங்களில் பகல்பத்து உற்சவம், கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. அப்போது பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பகல் பத்து உற்சவத்தில் இறைவனை தரிசிக்க பொது மக்கள் ஆவலுடன் கோவிலுக்கு செல்வது வழக்கம். 

    இந்த நிலையில் தமிழக அரசின் தடை காரணமாக பொது மக்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டு சென்றதை காண முடிந்தது.   அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வெளியில் நின்றே சாமி கும்பிட்டு விட்டு சென்றனர். 

    காலை முதல் இரவு வரை பரபரப்புடன் காணப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதி பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் இன்றி வெறிச்சோடியது.   கோவில்களைப் போன்றே கிறிஸ்தவ ஆலயங் கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் என்று மூடப்பட்டன. அங்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. முக்கியமான கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×