search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீரான் மைதீன்
    X
    மீரான் மைதீன்

    வங்கி அதிகாரி எனக்கூறி பெண்ணிடம் பணம் மோசடி

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் வங்கி அதிகாரி எனக்கூறி பெண்ணிடம் பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். ஏராளமான பெண்களிடம் அவர் பணம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ஆர்.எஸ்.மங்கலம், 

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா செட்டியமடை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி வசந்தி (வயது 38). இவர் வங்கியில் ரூ. 95 ஆயிரத்திற்கு நகையை அடமானம் வைத்துள்ளார். இதனை திருப்புவதற்காக வங்கிக்கு சென்று வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் என கேட்டார். 

    அப்போது அங்கு வந்த ஒருவர்  வசந்தியை தனியாக அழைத்து தான் வங்கியின் உதவி மேலாளர் என்றும், தனது பெயர் குமார் என்றும் அறிமுகம் ஆனார்.  அவர் நகைக்கு வட்டி தள்ளுபடி உள்ளது.  நான் மேலாளரிடம் பேசி வட்டியை குறைக்க சொல்லுகிறேன். நீங்கள் நாளை காலை 10 மணிக்கு வாருங்கள் என கூறியுள்ளார்.  இதனை நம்பிய வசந்தி வீட்டுக்கு சென்று விட்டார். 

    இந்தநிலையில் மறுநாள் வசந்தியின் செல்போனில் தொடர்பு கொண்ட குமார் வங்கிக்கு வந்து நகையை திருப்பிச் செல்லுங்கள் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து வசந்தியும், அவரது  மகன் வெங்கடேசனும் வங்கிக்கு சென்றனர். அங்கிருந்த குமார்  நகை அடமான வைத்த சீட்டு, வங்கி பாஸ்புக் மற்றும் ரூ.1 லட்சத்து ஆயிரத்தை வசந்தியிடம் வாங்கிக்கொண்டார். 

    பின்னர் வட்டி தள்ளுபடி செய்வதற்கான விண்ணப்பம் போஸ்ட் ஆபீஸில் உள்ளது. அதனை வாங்கி வாருங்கள் என கூறியுள்ளார். இதனை நம்பி வசந்தி தனது மகனுடன் தபால் அலுவலகம் சென்றபோது ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.  உடனடியாக அவர் வங்கிக்கு வந்தபோது உதவி மேலாளர் குமார் எனக்கூறி பணம் மற்றும் ஆவணங்களை பெற்ற நபர் அங்கு இல்லை. 

    இது தொடர்பாக வங்கியில் கேட்டபோது அப்படி யாரும் வேலை பார்க்கவில்லை என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தி ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வங்கிக்கு வந்து சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வசந்தியுடன் மர்ம நபர் இருப்பது தெரியவந்தது. 

    சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் திருவாடனை டி.எஸ்.பி. சின்னகண்ணு ஆலோசனையின்பேரில் சிறப்பு காவல்துறை சப்&-இன்ஸ்பெக்டர் மாரி தலைமையில் மகேஷ், சிரஞ்சீவி, பிரகாஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. 

    அவர்கள் குமார் பேசிய செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது ஏர்வாடி தர்கா அருகே தனியாக அறை எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை கைது செய்தனர். விசாரணையில்  அவரது பெயர் மீரான் மைதீன் (வயது 63) என்பதும், சிவகங்கை நேரு நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

    இவர் ஏராளமான பெண்களிடம் மோசடியாக பல பெயர்களில் பணம், நகை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×