search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் 14 குழந்தைகள் உள்பட 33 பேர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதி

    காய்ச்சலின் போது கஞ்சி, பழச்சாறு, இளநீர் மற்றும் உப்பு- சர்க்கரை கரைசல் போன்ற திரவ உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், காயச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு திறக்கப்பட்டு உள்ளது. இங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 33 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் கோவையை சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும், திருப்பூரை சேர்ந்த 2 பேர் என 33 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 14 பேர் குழந்தைகள். 234 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள், தடுப்பு முறைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    டெங்கு வைரஸ் தாக்கம் ஏற்படும் போது பசியின்மை, அதிக உடல் சோர்வு, தலை சுற்றல், குறைந்து அளவு சிறுநீர் வெளியேற்றம், குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வாய், பல், ஈறுகள், மூக்கில் ரத்தம் கசிதல், மலம் கருப்பாக வெளியேறுதல், மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். டாக்டரின் அறிவுரை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட கூடாது.

    டெங்கு வைரஸ் தாக்கம் இருந்தால் முதல் 5 நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். அடுத்த 3 நாட்களுக்குள் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா வெளியேறி ஆபத்தை உண்டாக்கலாம். எனவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால் காய்ச்சல் நின்ற பிறகு 3 நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே இருக்க வேண்டும்.

    குழந்தைகளை காய்ச்சல் நின்ற பிறகு 4 அல்லது 5 நாட்களுக்கு பிறகே பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

    வேலைக்கு செல்வோரும் காய்ச்சல் நின்ற பிறகு 4 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். காய்ச்சலின் போது கஞ்சி, பழச்சாறு, இளநீர் மற்றும் உப்பு- சர்க்கரை கரைசல் போன்ற திரவ உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

    பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. பயன்படுத்தாத பழைய பொருட்களை தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். எனவே கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தடவிக்கொள்ளலாம்.

    டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு இருப்பவர்களுக்கு ஐ.ஜி.எம். எலிசா பரிசோதனைகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது எனவும் பரிசோதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×