என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருவொற்றியூரில் இடிக்கப்பட உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்
  X
  திருவொற்றியூரில் இடிக்கப்பட உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்

  திருவொற்றியூரில் 6 மாடி குடியிருப்பு வீடுகளை இடிக்க முடிவு- மக்கள் அவசரம், அவசரமாக வெளியேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொது மக்கள் ஆபத்தான கட்டிடத்தில் இருந்து தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்களும் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

  திருவொற்றியூர்:

  சென்னை திருவொற்றியூர் அரிவாகுளம் பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் வசித்து வந்தனர்.

  ஏ, பி, சி, டி, இ, எப் என மொத்தம் 6 அடுக்குமாடி குடியிருப்புகள் அருகருகே கட்டப்பட்டு பொது மக்களுக்கு 1998-ம் ஆண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சுமார் 25 ஆண்டுகள் பழமையான இந்த அடுக்குமாடி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

  இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் அங்கேயே வசித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் அடுக்குமாடி கட்டிடத்தின் உறுதித்தன்மையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது.

  இதையடுத்து அந்த பகுதயில் உள்ள மக்கள் இது பற்றி தி.மு.க. பிரமுகரும் முன்னாள் கவுன்சிலருமான தனியரசுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த ‘டி’ பிளாக் அடுக்குமாடி பகுதிக்கு சென்று அந்த குடியிருப்பில் வசித்து வந்த மக்களை பத்திரமாக வெளியேற்றினார்.

  ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் 2 கட்டிடங்கள் இருந்தன. இந்த 2 கட்டிடங்களில் இருந்தும் நேற்று முன்தினம் இரவு மக்கள் வெளியேறினார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் டி பிளாக் அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது.

  பொது மக்கள் வெளியேறிய சில நிமிடங்களிலேயே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 24 வீடுகள் தரை மட்டமானது.

   

  வீட்டில் இருந்து எடுத்து வந்த பொருட்களை வெளியே வைத்திருக்கும் இளம்பெண்

  இதை பார்த்து அங்கு வசித்து வந்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவசரம் அவசரமாக தங்கள் கையில் கிடைத்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு உயிர் பயத்துடன் வெளியேறிய மக்களின் அனைத்து உடமைகளும் மண்ணோடு மண்ணாகிப் போனது. இதனை பார்த்து பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

  முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.

  அப்போது அவர் விரிசல் ஏற்பட்ட மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  அப்போது கட்டிடம் மக்கள் வாழ்வதற்கு தகுதியின்றி உறுதித்தன்மை இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக நேற்று இரவு அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

  அவர்களும் அந்த 6 குடியிருப்புகள் இனி பொது மக்கள் வசிப்பதற்கு தகுதி இல்லாதவை என்பதை உறுதி செய்தனர். எந்த நேரத்திலும் அந்த 6 அடுக்குமாடி குடியிருப்புகளும் இடிந்து விழலாம் என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடம் ஏற்பட்டது.

  இதனை தொடர்ந்து அனைத்து குடியிருப்புகளையும் இடித்து தள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் உடனடியாக இன்றே தொடங்கப்பட்டுள்ளன.

  நேற்று இடிந்து விழுந்து தரைமட்டமான டி பிளாக் அடுக்குமாடி குடியிருப்பு 2 பகுதிகளைக் கொண்டு இருந்தது. அதில் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில் இன்னொரு பகுதியும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்கிற நிலையில் உள்ளது.

  இதன் அருகில்தான் இ பிளாக் பகுதி குடியிருப்பு உள்ளது. டி பிளாக்கில் மிச்சமுள்ள கட்டிடமும் இடிந்து விழுந்தால் அது இ பிளாக்கில் வசிப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக அங்கு வசித்து வந்த 24 குடும்பத்தினரும் நேற்று வெளியேற்றப்பட்டனர்.

  சற்று தொலைவில் ஏ, பி, சி, எப் ஆகிய குடியிருப்புகள் ‘ப’ வடிவில் இருக்கிறது. இந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களையும் வெளியேற்றும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் தொடங்கி உள்ளது. மக்கள் உயிர் பயத்தோடு தங்கள் வீடுகளுக்குள் சென்று தங்களது பொருட்களை எடுத்தனர். அவற்றை மூட்டை கட்டி அவசரம், அவசரமாக வெளியில் எடுத்து வந்தனர்.

  உடையும் பொருட்களை மட்டும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு துணி மணி உள்ளிட்ட பொருட்களை மூட்டை கட்டி மாடியில் நின்று வீசினர். பின்னர் தங்களது உடமைகளை கீழே வந்து எடுத்துக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டபங்களுக்கு சென்றனர்.

  இதுபோன்று வெளியேறும் மக்கள் தங்குவதற்கு வசதியாக அதே பகுதியில் 4 திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

  இந்த திருமண மண்டபங்களில் பொது மக்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளோடு சென்று தஞ்சம் புகுந்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள 6 குடியிருப்புகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

  2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருமே இன்று மாலைக்குள் தங்கள் வீடுகளை காலி செய்து திருமண மண்டபங்களுக்கு சென்றுவிடும் வகையில் அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

  இதுபோன்று வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறும் அனைத்து மக்களுக்கும் தமிழக அரசின் ஆலோசனையின் பேரில் மாற்று இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், அவர்களுக்கான வாடகையை கொடுப்பது குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அவர் அங்கிருந்து தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

  பொது மக்கள் ஆபத்தான கட்டிடத்தில் இருந்து தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்களும் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

  நேற்று இடிந்து விழுந்த டி பிளாக் கட்டிடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் பொருட்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  இன்று காலை 6 கியாஸ் சிலிண்டர், பீரோ மற்றும் மாணவர்களின் பள்ளி ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்து பொது மக்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  நேற்று காலை டி பிளாக் அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததைப் போன்று மற்ற குடியிருப்புகளும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொது மக்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

  இதனை கருத்தில் கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் அதனை எதிர்கொள்ளும் வகையில் மீட்பு குழுவினருடன் போலீசார் தயார் நிலையில் கண்காணித்து வருகிறார்கள்.

  இதையும் படியுங்கள்... சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் 2-வது நாளாக ஆய்வு செய்த மத்திய குழுவினர்

  Next Story
  ×