search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்புபிரார்த்தனை நடைபெற்றது.அதில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்
    X
    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்புபிரார்த்தனை நடைபெற்றது.அதில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்

    திருப்பூர் மாவட்டத்தில் களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்களில் இரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
    திருப்பூர்:

    ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

    நேற்றிரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடைபெற்றன. திருப்பூர் குமரன் சாலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கேத்தரின் தேவாலயத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

     சரியாக 12 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பங்கு தந்தை இயேசு குழந்தையை தூக்கி வெளியே அமைக்கப்பட்டுள்ள குடிலுக்கு கொண்டு வந்து அவர் பிறந்தது போல காட்சிப்படுத்தினார். அதனை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். 

    இதேப்போல் திருப்பூர் குமார் நகர் சி.எஸ்.ஐ., ஆலயம், ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் உள்ள சூசையப்பர் ஆலயம், கோர்ட்டு அருகில் உள்ள டி.இ.எல்.சி.ஆலயம் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்களில் இரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. 

    இன்று காலையும் ஆலயங்களில் வழிபாடு நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும் வீடுகளில் விதவிதமான உணவுகள் தயாரித்து நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கினர்.

    கேக் உள்ளிட்ட இனிப்புகளையும் வழங்கினர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகள் களை கட்டி காணப்பட்டன. வீடுகள், ஆலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. விதவிதமான ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்பட்டு இருந்தன.   

    கடந்த வருடம் கொரோனா கடும் கட்டுப்பாடுகளால் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் குறைந்த அளவிலேயே நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி அனைத்து ஆலயங்களிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:

    கடந்த வருடம் கொரோனா காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை பிரார்த்தனையில் குறைந்த நபர்களே பங்கேற்க முடிந்தது. இதனால் வீடுகளிலேயே பிரார்த்தனையில் ஈடுபட்டோம். யூ டியூப் மூலம் சிறப்பு பிரார்த்தனை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த வருடம் ஆலயங்களில் அனைவரும் பிரார்த்தனை செய்ய முடிந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது என்றனர். 
    Next Story
    ×