search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடை
    X
    டாஸ்மாக் கடை

    சென்னையில் டாஸ்மாக் மதுபார்களுக்கு டெண்டர் விடும் பணி தொடங்கியது

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மது பார்களில் தின்பண்டங்கள் விற்பது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான டெண்டர் விடும் பணி தொடங்கி உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் கூடிய பார்களின் அனுமதி காலம் கடந்த ஆண்டோடு நிறைவு பெற்றது. கொரோனா பாதிப்பால் டெண்டர் விடப்படுவது காலதாமதம் ஆனது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மது பார்களில் தின்பண்டங்கள் விற்பது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான டெண்டர் விடும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன.

    2 ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் இன்று தொடங்கி உள்ளன. வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் 2023 டிசம்பர் 31-ந் தேதி வரையிலான காலத்துக்கு டெண்டர் விடப்படுகிறது.

    இதற்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை வினியோகிக்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை ரூ.525-க்கு மாவட்ட மேலாளர், டாஸ்மாக், சென்னை என்ற முகவரிக்கு வரைவோலை எடுக்க வேண்டும்.

    பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 30-ந் தேதி பிற்பகல் 3 மணியளவில் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் திறக்கப்படும்.

    சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை டாஸ்மாக் கடையின் கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் முதல் மார்ச் 2021 வரை 7 மாதங்களில் நடந்த சராசரி விற்பனை கணக்கிடப்பட்டு பாருக்கான குறுமத்தொகையாக குறைந்தபட்சம் 1.8 சதவீதமாக நிர்ணயிக்கப்படும்.

    நீண்ட மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடை பார் விற்பனைக்கான டெண்டர் விடப்பட்டு இருப்பதால் அதனை எதிர்பார்த்த கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.



    Next Story
    ×