search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-சீட் கிடைக்காவிட்டால் சுயேட்சையாக களமிறங்க அரசியல் கட்சியினர் திட்டம்

    மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வினீத், வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
    திருப்பூர்:

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி, மாவட்டம் தோறும்  நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

    கடந்த நவம்பர் 1-ந்தேதிவெளியான சட்டசபை தொகுதி வாரியான வரைவு பட்டியல் அடிப்படையில்  உள்ளாட்சி அமைப்புகளுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வினீத், வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர். உள்ளாட்சி அமைப்புகள் தோறும் வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, 5நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 511 ஆண்கள்,5 லட்சத்து 49 ஆயிரத்து 149 பெண்கள், 197 திருநங்கைகள் என 10 லட்சத்து 98 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர். 

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. கடந்தமுறை உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட போது வேட்பாளராக உறுதி செய்யப்பட்டவர்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த 2016-ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலும் செய்தனர். 

    இட ஒதுக்கீடு அடிப்படையில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏற்கனவே அங்கு கவுன்சிலர்களாக இருந்தவர்கள் தங்கள் மனைவி மற்றும் பெண் உறவினர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தனர்.

    திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 40 சதவீதம் பேர் சோர்வடைந்து ஒதுங்கி விட்டனர். ஆனால் 60 சதவீதம் பேர் மக்கள் பணியில் தங்களை தொடர்ந்து இணைத்து கொண்டனர். தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை அறிந்து  சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டு செல்வது அரசு நல உதவிகளை பெற்றுத்தருவது என்பது போன்ற பல பணிகளை மக்களுடன் தொடர்பில் இருந்து செய்து கொடுக்கின்றனர்.

    தற்போது தேர்தலில் போட்டியிட கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே கடந்த முறை ‘சீட்’ உறுதி செய்யப்பட்டு மக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் இம்முறை தேர்தலிலும் தங்களுக்கு தான் கட்டாயம் சீட் ஒதுக்க வேண்டும்.தேர்தல் நடத்தப்படாத இந்த இடைப்பட்ட காலத்தை மக்களின் செல்வாக்கை தக்க வைத்து கொள்ள கிடைத்த சலுகை காலமாக தான் கருதுகிறோம் எனக்கூறி வருகின்றனர்.

    சீட் மற்றும் வெற்றி பெறுவதற்கான யுக்திகளையும் கையாண்டு வருகின்றனர்.  

    ‘சீட்’ கிடைக்காத பட்சத்தில் சுயேட்சையாக களமிறங்கி  தங்களின் செல்வாக்கை தக்க வைக்கவும் வியூகம் வகுத்து வருகின்றனர்.அதே நேரம் புதியவர்கள் பலரும் கட்சியில் ‘சீட்’ கேட்பதால்  வேட்பாளர் தேர்வு என்பது இம்முறை கடும் போட்டியாக இருக்கும் என அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக வலம் வருகிறது.

    இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வாக்காளர்பட்டியலில் வாக்காளர்களுக்குத் தெரியாமல் பலரின் பெயர்கள் வேறு வார்டுக்கு மாற்றம் செய்வதைத் தடுக்க வலியுறுத்தி தாராபுரம் கோட்டாட்சியரிடம் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர். 

    இதுகுறித்து தாராபுரம் சப்-கலெக்டர் குமரேசனிடம், பா.ஜ.க. இளைஞரணி மாவட்டத் தலைவர் யோகேஸ்வரன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் 9-ந் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி  தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கருதுபவர்களை வேறு வார்டுகளுக்கு மாற்றவும், தங்களுக்கு வேண்டப்பட்ட வாக்காளர்களை தங்களுக்கு தேவைப்படும் வார்டுகளுக்கு மாற்றவும் முயற்சி செய்கின்றனர். 

    குறிப்பாக ருத்ராவதி பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களை வேறு வார்டுக்கு மாற்ற சொல்லி அலுவலர்களை நிர்ப்பந்திப்பதாக அறிகிறோம். மேற்படி மாற்றம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×