search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாரதி பாஸ்கர்
    X
    பாரதி பாஸ்கர்

    ஜாதி ஒழிய வேண்டும் என்று ஒலித்த முதல் குரல் பாரதியின் குரல் -பாரதி பாஸ்கர் பேச்சு

    ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம், நேற்றோடு எனது தோல்விகள் முடிந்தன’ என்ற பாரதியின் வரியை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று பாரதி பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை, திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பாக "பாரதி திருவிழா-2021" என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தொடங்கிய இந்த விழா, நாளை வரை நடக்கிறது.

    இன்று நடைபெற்ற வாரந்தோறும் பாரதி என்ற நிகழ்ச்சியில் "இன்று புதிதாய்ப் பிறந்தோம்" என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர் உரையாற்றினார்.  அவரது உரை விபரம் வருமாறு:

    பாரதி  வாழ்ந்த இந்த இல்லத்தில், பாரதியின் நினைவு நூற்றாண்டில் இந்த மகாகவியின் பிறந்தநாள் திருவிழாவில் பேசுவதில் பெருமைக் கொள்கிறேன்.  

    நான் மருத்துவமனையில் இருந்தபொழுது மகாகவி பாரதியின் புத்தகம் எனக்கு பெருந்துணையாக இருந்தது. அதில் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற வரி எனக்கு நம்பிக்கையை கொடுத்தது.  நோயிலிருந்து மீண்டு வரும் ஒவ்வொருவருக்குமான வரி இது. சோகங்கள், வேதனைகள், வலிகள், கண்ணீர்கள், அவமானங்கள், புறக்கணிப்புகள், தோல்விகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ‘இந்த நாள் புதிதானது’ என்ற பாரதியாரின் வரிகள் அனைவரையும் காப்பாற்றும். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை பாரதியின் இந்த வரிகள்  கற்றுக் கொடுக்கிறது. 

    நாம், ஒவ்வொரு முறையும் பாரதியை நினைக்கிறபொழுது அவருடைய பிரமிப்பு நம்மை ஆட்கொள்கிறது. கண்ணதாசன் அவர்கள் பாரதியைப் பற்றிக் கூறும்பொழுது, ‘ஒரே ஒரு புத்தகத்தில் ஓராயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கிறார்’ என்றார்.  தன்னுடைய 38 வருட வாழ்க்கையில் 300 வருட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று தைரியமாக சொல்லுகின்ற உரிமையை கவிஞர்களுக்கு கொடுத்தவர் பாரதி.  யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் பெருமையை  கூறியவர் மகாகவி பாரதி. 

    ‘நல்லதோர் வீணை செய்து அதை நலங் கெட புழுதியில் எறிவதுண்டோ’ என்ற வரியில் ‘பாரதி நம்முடைய உடல் நலனை பேண வேண்டும், குறிப்பாக பெண்கள் தங்கள் உடல் நலனை பேண வேண்டும்’ என்கிறார். 

    நாமிருக்கும் நாடு நமதென்பது என்று அறிந்தோம் என்று தேசப்பற்றை மக்களுக்கு ஊட்டினார். 1908இல் அவர் எழுதிய ‘ஆறில் ஒன்று’ என்ற புத்தகத்தில் ‘இந்த தேசத்தில் 30 கோடி மக்களும் ஒரே ஜாதி. வேறு வேறு மதங்கள் இருக்கலாம். மதங்களில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால்  விரோதம் இருக்கக் கூடாது.  பிறப்பினால் வருகின்ற சாதிகளை கொண்டு பெருமையோ சிறுமையோ கொள்ளக் கூடாது என்ற பாரதியின் இந்த வரிகள் இன்றும் இந்த மண்ணிற்கு தேவையாக உள்ளது. ஜாதி ஒழிய வேண்டும் என்று ஒலித்த முதல் குரல் பாரதியின் குரல்.
     
    இன்றைய நாள் என்பது பரிசு என்ற மகிழ்ச்சியோடு அந்த நாளை எதிர்கொள்பவன் வெற்றியடைவான். ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம், நேற்றோடு எனது தோல்விகள் முடிந்தன’ என்ற பாரதியின் வரியை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். மகாகவி பாரதி விதைத்த ‘நம்பிக்கை’ என்ற விதைக்கு ஒரு நாளும் மரணம் கிடையாது. வாழ முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கும் பாரதியின் கவிதை வரிகளை நம்முடைய பெண் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  

    இவ்வாறு தமது பேச்சின்போது பாரதி பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×