search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    தமிழகத்தில் 8,690 ஏரிகள் நிரம்பியது- வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 77 சதவீதம் அதிகம்

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14 ஆயிரத்து 138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 2,989 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளது.
    சென்னை:

    மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், வடகிழக்கு பருவமழை தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை 1-10-2021 முதல் 7-12-2021 வரை 683.4 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவான 385.9 மில்லி மீட்டரை விட 77 சதவீதம் கூடுதல் ஆகும்.

    சென்னை மாநகராட்சி பகுதியில் 257 பேர் 3 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 1,330 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதர மாவட்டங்களில் 2,156 பேர் 36 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14 ஆயிரத்து 138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 2,989 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 90 நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டி.எம்.சி.யில் 212.009 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இது 94.52 சதவீதம் ஆகும்.

    சென்னை மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள 6 இடங்களில் அதிக திறன் கொண்ட 26 பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது.

    இதுவரை 19 ஆயிரத்து 740 மருத்துவ முகாம்கள் மூலம் 6 லட்சத்து 48 ஆயிரத்து 689 பேர் பயன் அடைந்துள்ளனர். மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் 918 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. 54 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    கடந்த 24 மணிநேரத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. 47 கால்நடைகள் இறந்துள்ளன. 633 குடிசைகள் பகுதியாகவும், 55 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 688 குடிசைகளும், 100 வீடுகள் பகுதியாகவும், 15 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 115 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

    இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 811 ஹெக்டேர் வேளாண்மை பயிர்களும் 16 ஆயிரத்து 447 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும், 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்துள்ளன.

    சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 13 ஆயிரத்து 450 புகார்கள் வரப்பெற்று 12 ஆயிரத்து 42 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.

    மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு (கட்டணமில்லா தொலைபேசி எண்.1070) வரப்பெற்ற 7227 புகார்களில் 6,937 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு (கட்டணமில்லா தொலைபேசி எண். 1077) வரப்பெற்ற 7040 புகார்களில் 6,958 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×