search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    மழையால் விளைச்சல் பாதிப்பு-தக்காளி, அவரை, முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு

    தற்போது மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கும், சில்லறை விலையில் கிலோ ரூ.110-க்கும் தக்காளி விற்கப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மழை ஓய்ந்தாலும் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலையில் நிலைத்தன்மை இல்லாத சூழல் உள்ளது. சென்ற வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்கப்பட்டது. வெளிமாநில வரத்து அதிகரித்ததால்  4  நாட்களுக்கு விலை மாற்றமின்றி இருந்தது. அதே நேரம் உள்ளூர் வரத்து பாதியாக குறைந்ததால் பலரும் வெளிமாநில தக்காளி வாங்க தொடங்கினர். 

    தற்போது மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கும், சில்லறை விலையில் கிலோ ரூ.110-க்கும் தக்காளி விற்கப்பட்டது. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் 14 கிலோ ட்ரே ரூ.1,200 க்கும், 28 கிலோ ட்ரே ரூ.2,400-க்கும் விற்றது. அதேநேரம், வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தையில் குறைந்த விலைக்கு (கிலோ 90 ரூபாய்) தக்காளி விற்கப்பட்டது. பொதுமக்கள் நேரடியாக சந்தைக்கு வந்தால் குறைந்த விலையில் தக்காளி வாங்கி செல்லலாம் என உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு தக்காளி பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு சீசனில் தொடர் மழை காரணமாக  விளைநிலங்களில், தண்ணீர் தேங்கி  தக்காளி செடிகள் பாதித்தது. இதனால், சந்தைக்கு வரத்து குறைந்து விலை உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்  மழை இடைவெளி விட்டதால் தக்காளி விலை 13 கிலோ கொண்ட பெட்டி ஆயிரம் ரூபாயாக சற்று குறைந்தது. நேற்றுமுன்தினம் மீண்டும் மழை பெய்ததால் நேற்று வரத்து சரிந்து பெட்டி 1,300 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. 

    பொங்கலூரில் கணிசமான விவசாயிகள் இந்த ஆண்டு பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பப்பாளி மரங்கள் அழுகி வருகின்றன. மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் பப்பாளிக்கு போதுமான விலை கிடைக்கிறது. வெளியூர் வியாபாரிகள் தோட்டத்துக்கே சென்று  ஒரு கிலோ 8 ரூபாய்க்கு பறித்து செல்கின்றனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 

    10 ஆண்டுகளாக கள்ளி பூச்சி பப்பாளியை தாக்கி பெரும் சேதம் விளைவித்தது. பல ஆண்டுகளுக்கு பின் தற்போது கட்டுப்படியான விலை கிடைக்கிறது என்றனர்.

    வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்தில் முருங்கை ஒரு கிலோ ரூ.100-க்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பிஞ்சு மற்றும் பூக்கள் உதிர்வினால் முருங்கைக்காய் விளைச்சல் குறைந்து விட்டது. 

    வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்துக்கு நேற்று 500 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்தது. கரும்பு முருங்கைக்காய் மட்டுமே வந்திருந்ததால் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    விவசாயிகள் சிலர் கூறுகையில், 

    பல மாதங்களுக்கு பின் அதிக விலையாக ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் விளைச்சல் குறைந்தது கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

    திருப்பூர் மாநகரில் தக்காளியைத் தொடர்ந்து அவரைக்காயும் விலை உயர்ந்து தற்போது கிலோ ரூ.120-க்கு விற்பனையாகிறது.அவரைக்காய் முதல் ரகம் கிலோ ரூ.120-க்கும், இரண்டாவது ரகம் ரூ.100-க்கும் விற்பனையானது. 

    கத்தரிக்காய் ரூ.90, வெண்டைக்காய் ரூ.80, பீன்ஸ் ரூ.90, நாட்டு முருங்கைக்காய் ரூ.100, நாசிக் முருங்கை கிலோ ரூ.250 என விற்பனையானது. காய்கறிகள் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×