search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இ.எஸ்.ஐ.
    X
    இ.எஸ்.ஐ.

    மத்திய அரசு எவ்வித தளர்வும் அளிக்காததால் இ.எஸ்.ஐ., திட்ட பயன்களை பெற முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள்

    கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலை உருவானது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகமானோர் தொற்றுக்கு உள்ளாகினர்.
    திருப்பூர்:

    கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா முதல் அலை வீசியது. முழு ஊரடங்கால் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஊரடங்கு நாட்களை பணிக்காலமாக கருதி உறுப்பினராக உள்ள அனைத்து தொழிலாளரும் இ.எஸ்.ஐ., ல் சிகிச்சை மற்றும் பண பயன்கள் பெறலாம் என மத்திய அரசு அறிவித்தது. 

    அரசின் இந்த அறிவிப்பு கொரோனா உட்பட பல்வேறு இணை நோய்களுக்கு இ.எஸ்.ஐ.,ல், சிகிச்சை பெறுவதற்கு தொழிலாளருக்கு கைகொடுத்தது. கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலை உருவானது. முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிகமானோர் தொற்றுக்கு உள்ளாகினர். 

    பெரிய மருத்துவமனைகளிலும் கூட படுக்கை இல்லை என்கிற நிலை உருவானது.தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தின. 

    இதனால் திருப்பூரில் இரண்டு மாதத்துக்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தற்போது இ.எஸ்.ஐ., திட்ட விதிமுறைகளில் மத்திய அரசு எவ்வித தளர்வும் அளிக்கவில்லை. இதனால் திருப்பூர் உட்பட நாடுமுழுவதும் பல லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., திட்ட பயன்களை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு., பனியன் சங்க பொது செயலாளர் சம்பத் கூறியதாவது:-

    கொரோனா முதல் அலையின் போது விடுப்பு நாட்களை, பணிக்காலமாக கருதி அனைத்து தொழிலாளரும் இ.எஸ்.ஐ., திட்ட பயன்களை பெறலாம் என மத்திய அரசு அறிவித்தது. இரண்டாவது அலையின்போது அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் அடுத்த 6  மாதங்களுக்கு இ.எஸ்.ஐ., ல் சிகிச்சை மற்றும் பண பயன்கள் பெறமுடியாத நிலை உருவாகியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பெருந்தொகை செலவிடவேண்டியுள்ளது. 

    மத்திய அரசு இரண்டாவது ஊரடங்கு காலத்தையும் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இதனால் இ.எஸ்.ஐ.,ல் உறுப்பினராக உள்ள அனைத்து தொழிலாளரும், தடையின்றி சிகிச்சை, பண பயன்கள் பெறமுடியும். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×