search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கல்வி தரத்தை மேம்படுத்த விகிதாச்சார ஆசிரியர் பணி - பெற்றோர் ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

    10-ம்வகுப்பில் மட்டும் பள்ளி துவங்கிய நாளில் இருந்து 15 குழந்தைகள் வகுப்புக்கு வரவில்லை. நேரடியாக விசாரிக்கையில் குடும்ப சூழல் காரணமாக சிலர் வரவில்லை.
    திருப்பூர்:

    பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய கல்வித்துறை அறிவுறுத்திய நிலையில் திருப்பூர் நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் களப்பணியை தொடங்கி உள்ளனர்.எம்.எஸ்.நகர்., கொங்கு மெயின் ரோடு, பி.என்.ரோடு பகுதிகளில் வசிக்கும் 10-ம்வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பள்ளி வராததற்கான காரணத்தை கேட்டறிந்தனர்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் காமன் கூறியதாவது:

    10-ம்வகுப்பில் மட்டும் பள்ளி துவங்கிய நாளில் இருந்து 15 குழந்தைகள் வகுப்புக்கு வரவில்லை. நேரடியாக விசாரிக்கையில் குடும்ப சூழல் காரணமாக சிலர் வரவில்லை. ஒரு மாணவனின் பெற்றோர் இருவரும் மாற்றுத்திறனாளி. உடல் நிலை மோசமாக உள்ளதால் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. 

    இந்த மாணவனுக்கு ஆசிரியர்கள் இணைந்து கல்வி உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளனர். சில மாணவர்கள் குடும்பத்துடன் பிற மாவட்டத்துக்கு திரும்ப உள்ளதால் பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் கூறியதால் நான்கு பேர் மீண்டும் பள்ளி படிப்பை தொடர முன்வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    உடுமலை கல்வி மாவட்டத்தில் 118 துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் தினமும் வகுப்புகளும் அதிக எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அனுப்பி வைக்க ஆர்வம் காட்டுவது கல்வித்துறையினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் சரவணன் கூறியதாவது:

    ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி வகுப்புகள்நடத்தப்படுகிறது. சுழற்சி முறையில் பாட வகுப்புகள் நடத்தியும் மொத்தமுள்ள பள்ளிகளில் தினமும் 90 சதவீத அளவில் மாணவர்களின் வருகை உறுதி செய்யப்படுகிறது.

    பெற்றோர்கள் தினமும் பாட வகுப்புகளை நடத்த கோரிக்கை விடுக்கின்றனர். கூடுதல் வகுப்பறைகள் இருந்தால் அதற்கு ஏற்ப முடிவு எடுக்க அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் அரசு மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்கீழ் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 774 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. உரிய கல்வித்தகுதி உடையவர்களை பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகம் தேர்வு செய்து கொள்ளலாம். 

    தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மேல்நிலை பள்ளிகளில் பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் உருவான காலிப்பணியிடங்கள் மிகக்குறைவு. அதேசமயம் மாணவர்- ஆசிரியர் விகிதாசாரத்திற்கு ஏற்ப தோற்றுவிக்கப்படாத பணியிடங்கள் அதிகமாக உள்ளன.

    இதுகுறித்து பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது:

    அரசு பள்ளிகளில் நடப்பாண்டு தமிழ், ஆங்கிலம், வணிகவியல் பொருளியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கிய பிரிவுகளில் வழக்கத்தை காட்டிலும் அதிக மாணவர்கள் சேர்க்கை நடந்திருக்கிறது. மேலும் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் கணக்கிட்டால் ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தது 5,15 வரை ஆசிரியர் தேவை இருக்கிறது.

    அரசு அறிவித்த தொகுப்பூதிய நியமனம் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன்மூலம் அதிகபட்சம்  ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே நிரப்ப முடியும்.விகிதாசார அடிப்படையில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தால் மட்டுமே அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தமுடியும். தொகுப்பூதிய அடிப்படையிலாவது தோற்றுவிக்க அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×