search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருச்சியில் மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தனியார் பள்ளி தாளாளர் இன்று கைது

    திருச்சி அருகே விடுதியில் தங்கி படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

    திருச்சி:

    தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதனை தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு அதிகமான தைரியமூட்டும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலமாக அறிவுரை வழங்கினார்.

    இந்த நிலையில் திருச்சியில் மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் தாளாளராக ஜேம்ஸ் (வயது 50) என்பவர் இருந்து பள்ளியையும் நடத்தி வருகிறார். இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இதில் சில மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கிறார்கள். கடந்த சில நாட்களாக விடுதியில் தங்கி படிக்கும் 14 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு தாளாளர் ஜேம்ஸ் அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அந்த மாணவி இது குறித்து சக மாணவிகளிடம் கூறி அழுதுள்ளார்.

    பின்னர் இந்த தகவல் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கு திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் திற்கு மாற்றப்பட்டு இன்ஸ்பெக்டர் மீராபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை பள்ளிக்கு சென்று சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பள்ளி தாளாளர் ஜேம்ஸ் மாணவியிடம் அத்துமீறியது தெரிய வந்தது. பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×