search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிரம்பிய நிலையில் உள்ள அதிசய கிணறை வியப்புடன் பார்க்கும் பொதுமக்கள்
    X
    நிரம்பிய நிலையில் உள்ள அதிசய கிணறை வியப்புடன் பார்க்கும் பொதுமக்கள்

    திசையன்விளை அருகே சுற்றுலா தலமான அதிசய கிணறு - பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்

    திசையன்விளை மாவட்ட கலெக்டர் வெள்ள காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நம்பியாற்று தண்ணீரை இந்த கிணற்றுக்கு திருப்பிவிட ஏற்பாடு செய்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையின் ஒரு பகுதியில் கால்வாயில் வரும் தண்ணீர் மூலம் பாசனமும், மறுபுறம் செம்மண் தேரிக்காடும் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மிக குறைந்த அளவு மழை பெறும் பகுதியாகவும் இந்த பகுதி இருந்தது.

    இந்த பகுதியின் வறட்சியை போக்கவே, தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் நதிநீர் இணைப்பு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கனமழை கொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது நம்பியாறு கால்வாய் நிரம்பி வெள்ளநீர் ஆயன்குளம் படுகையில் உள்ள தனியாருக்கு சொந்தமான 2 கிணற்றுக்குள் பாய்ந்தது. ஆனால் அதிசயம் அந்த கிணற்று நீர் நிரம்பவே இல்லை. கிணற்றின் நீர்மட்டமும் உயரவில்லை.

    இதைத் தொடர்ந்து அப்போதைய மாவட்ட கலெக்டர் வெள்ள காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நம்பியாற்று தண்ணீரை இந்த கிணற்றுக்கு திருப்பிவிட ஏற்பாடு செய்தார்.

    அதுமுதல் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலில் கலக்கும் தண்ணீர் இந்த கிணறுகளுக்கு திருப்பிவிடப்படும். கடந்த வருடம் வரை இந்த கிணறு நிரம்பவே இல்லை.

    இந்த ஆண்டும் திசையன்விளை தாலுகா குளங்கள் பாசனத்திற்கு நம்பியாற்று அணை திறக்கப்பட்டு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அந்த தண்ணீர் திசையன்விளையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஆயன்குளம் படுகைக்கு சென்றது. படுகை முழுவதுமாக நிறைந்த நிலையில் அருகில் உள்ள சுமார் 50 அடி அழம் உள்ள தனியாருக்கு சொந்தமான இரண்டு கிணறுகளுக்கு அப்பகுதி விவசாயிகள் கால்வாய்மூலம் கடந்த வாரம் திருப்பிவிட்டனர்.

    அது அருவிபோல் கிணற்றில் கொட்டியது. படுகையில் நீர்வரத்து அதிகமானதை தொடர்ந்து கிணறுகளுக்குள் செல்லும் கால்வாய்களிலும் அதிகமான தண்ணீர் சென்றது.ஆனால் அதிசயமாக இந்த ஆண்டு கிணற்றின் நீர்மட்டம் உயர்ந்து கால்வாய் நீர்வரத்துக்கு சம அளவில் வந்தது. ஆனால் தண்ணீர் உள்வாங்குவது குறையவில்லை.

    கிணற்றுக்குள் தண்ணீர் சுழன்றவாறு சென்று கொண்டிருக்கிறது. தண்ணீர் கிணற்றுக்குள் செல்வதால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள குட்டம், உவரி, காரி கோவில், குண்டல், நவ்வலடி பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து உப்புநீர் நல்ல நீராக மாறுவதாக விவசாயிகள் கூறினர்.

    இந்த அதிசய கிணறுகளை பற்றி கேள்விப்பட்டு தினசரி நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா செல்வதுபோல் கார், வேன், ஆட்டோ மற்றும் 2 சக்கர வாகனங்களில் குடும்பம் குடும்பமாக வந்து வியப்புடன் பார்த்து செல்கின்றனர். 

    Next Story
    ×