search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஒட்டன்சத்திரம்-விளாத்திகுளம், திருச்செங்கோட்டில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமய வகுப்புகளுடன் தற்காலிக கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 3 புதிய கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    2021-22-ம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அற நிலையத்துறை மானியக் கோரிக்கையில், 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஆகிய நான்கு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 4 பாடப் பிரிவுகளுடன் கல்லூரிகள் தொடங்கிட உயர் கல்வித்துறையால் அனுமதி அளிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

    முதற்கட்டமாக சென்னை, கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்த 2-ந்தேதியன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக ஒட்டன்சத்திரம், சின்னயகவுண்டன்வலசில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டு அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமய வகுப்புகளுடன் தற்காலிக கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட விளாத்திக்குளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டிடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுப்புளியம்பட்டி கிராமத்தில் தற்காலிகக் கட்டடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

    கிராமப்புற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காகவும், வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இக்கல்லூரிகள் பெரிதும் உதவியாக அமையும்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, பி.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ச.விசாகன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், மற்றும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    Next Story
    ×