search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொது பயன்பாட்டு மையம் மூலம் திருப்பூரில் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பு வேகம் பெறும் - எந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் தகவல்

    மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும் பத்து ஜக்கார்டு நிட்டிங் மெஷின்கள், நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தில் நிறுவப்பட்டுள்ளன.
    திருப்பூர்:

    தென்னிந்திய இறக்குமதி எந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம் (சிம்கா) 40 நிட்டிங் துறையினரை ஒருங்கிணைத்து மத்திய, மாநில அரசு மானியத்துடன் பல்லடம் நாரணாபுரத்தில் நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.

    இம்மையத்தில் அதிநவீன நிட்டிங் எந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக கடந்த செப்டம்பரில் தைவான் நாட்டிலிருந்து 10  காலர் நிட்டிங் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பொதுபயன்பாட்டு மையத்தில் துணி உற்பத்தி தொடங்கப்பட்டது.

    இரண்டாம் கட்டமாக தற்போது சீனாவில் இருந்து 5 செமி ஜக்கார்டு, 5 புல் ஜக்கார்டு எந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இப்புதிய எந்திரங்கள் விரைவில் இயக்கத்தை தொடங்க உள்ளன.

    இதுகுறித்து ’சிம்கா’ தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:

    திருப்பூரில் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பை எளிதாக்கும் வகையில் நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளன. 

    தற்போது வந்துள்ள செமி ஜக்கார்டு, புல் ஜக்கார்டு எந்திரங்கள் மூலம் சிங்கிள் கேம் செமி ஜக்கார்டு எந்திரஙகளில் பிளைன் காலர், ஜக்கார்டு, ஸ்வெட்டர் டிசைன்கள், பேஷன் ஆடை ரகங்கள் தயாரிக்கலாம். புல் ஜக்கார்டு எந்திரங்கள் மேற்கண்ட அனைத்து ரகங்களுடன் கூடுதலாக அதிக எடையுள்ள ஆடைகள், ஜக்கார்டு பிளேட்டிங், ஷூக்களின் மேற்பகுதி தயாரிக்கலாம். 

    கை, கால், உடல் பேனல் என ஆடையின் அனைத்து பாகங்களையும் இந்த எந்திரம் தயாரித்துக் கொடுத்துவிடும். பாகங்களை இணைத்தாலே போதும் முழு ஆடையாகிவிடும். மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பில் இந்த எந்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

    பின்னலாடை உற்பத்தி துறையினர், பொது பயன்பாட்டு மையத்தை பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட, துணி ரகங்கள் தயாரித்துப்பெற துவங்கிவிட்டனர். வரும் 2022 மார்ச் மாதம் ஜெர்மனியில் இருந்து 25 சர்க்குலர் நிட்டிங் எந்திரங்கள் இறக்குமதியாக உள்ளன. 

    அதன்பின், நிட்டிங் தொழில் பயிற்சி துவங்கப்படும். தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு நிட்டிங் நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவர். பயிற்சி அளிப்பதற்காக டெக்ஸ்டைல் கமிட்டி, ‘நிப்ட்-டீ’ கல்லூரியுடன் இணைந்து, பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது. 

    பழுதடைந்த எந்திரங்களை சரி செய்வதற்காக, ஒர்க்ஷாப் கட்டமைப்புகளும் உருவாக்கப்படும். பொது பயன்பாட்டுமையம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் போது திருப்பூரில் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பு வேகம் பெறும். இவ்வாறு, அவர் கூறினார். 
    Next Story
    ×