search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    மழைநீர் சேகரிப்பை மேற்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள்

    நகர்மயமாக்கல், மக்கள்தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் மழைநீர் சேமிப்பு குறைகிறது.
    திருப்பூர்:

    திருப்பூரில் எவ்வளவுதான் மழை கொட்டித்தீர்த்தாலும், கோடைக்காலம் வரும்போது தண்ணீர் பிரச்சினை எழுவதை தவிர்க்க முடிவதில்லை. இயற்கை  நமக்கு போதுமான மழையை கொடுக்கிறது. திருப்பூரில் நொய்யல் குளங்கள் தண்ணீர் சேகரிப்பதற்கான வரங்கள். தூர்வாராமல் கிடந்த குளங்கள் சமீப காலமாக தூர்வாரப்பட்டு மழைநீரை சேகரிக்க ஏதுவாகியிருக்கின்றன. குளங்கள் நிரம்பியும் இருக்கின்றன. 

    இருப்பினும் கூட நிலத்தடி நீர்மட்டம் கோடைக்காலத்தில் சரிந்துவிடுவது, தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாக அமைகிறது. நொய்யலில் பெருக்கெடுக்கும் வெள்ளம் கூட குளங்கள் நிறைந்தபின் கடந்து சென்று வருகிறது.

    தண்ணீர் பற்றாக்குறை என்பது மழைநீர் வீணாக்குதல் அல்லது சேமிக்காததன் விளைவுதான் காரணம். நகர்மயமாக்கல், மக்கள்தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் மழைநீர் சேமிப்பு குறைகிறது. கடந்த 2011-ல் நிலத்தடி நீர் தேவையை உணர்ந்த தமிழக அரசு  கட்டாய மழைநீர் சேமிப்பை அமலுக்கு கொண்டு வந்தது. 

    அனைத்து வீடுகள் கட்டிடங்களில் கட்டாயம் மழைநீர் சேமிப்பு அமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலானது. குழி தோண்டியோ, கொள்கலன் மூலமோ மழைநீர் சேமிக்கப்பட்டு வந்தது. 

    திருப்பூர் நெருக்கமான கட்டிடங்கள் நிறைந்த நகரம். வீடுகள் பலவற்றில்  மழைநீர் சேமிப்பிற்கேற்ற இடவசதி குறைவு. வீடுகளின் மேற்பரப்பில் குழாய்களை ஒருங்கிணைத்து சேமிப்புத் தொட்டி அல்லது கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைச் சேமிக்க இயலும்.  

    மழைநீர் சேகரிப்பு காலத்தின் கட்டாயம் என்றாலும் இந்த விதிமுறை தற்போது பெயரளவுக்குத்தான் இருக்கிறது. திருப்பூரில் பல்வேறு இடங்களில்  பயன்படுத்தப்படாத ஆழ்துளைக்கிணறுகள் மூலம் மழைநீர் அறுவடை என்பது வெற்றிகரமாகி இருக்கிறது. 

    எனவே மழைநீர் சேமிப்பை மக்களே உணர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 
    Next Story
    ×