search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழந்தபடி செல்லும் வெள்ளம்.
    X
    உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழந்தபடி செல்லும் வெள்ளம்.

    திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு-கோவில் மற்றும் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

    திருமூர்த்தி மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில், வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலையாறு மூணாறு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையால் பாம்பாற்றிலும், கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதிகளில் பெய்யும் மழையால், தேனாற்றிலும், வால்பாறை மலையின் கிழக்கு பகுதியில் பெய்யும் மழையால் சின்னாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, கடந்த மாதம், 27-ம் தேதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர் மட்டம், 87.70 அடியாக இருந்தது. நீர் வரத்து, வினாடிக்கு, 2,750 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து, 2,650 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து மூன்று நாட்களாக உபரி நீர் திறக்கப்படுவதோடு, அணையின் துணை ஆறுகள் மற்றும் ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூர் வரையிலுள்ள, அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வினாடிக்கு, 6 ஆயிரம் கன அடி வரை நீர் செல்கிறது. வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருமூர்த்தி மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதோடு, பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் நேற்று திருமூர்த்திமலை கோவில் நடை சார்த்தப்பட்டு பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. மலைப்பகுதியில் பெய்த அதி கன மழையால் நேற்று மதியம், 2 மணிக்கு, திடீரென பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து ஆர்ப்பரித்து ஓடியது.

    திருமூர்த்தி அணையில் காலை நிலவரப்படி மொத்தமுள்ள, 60 அடியில் 55.05 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. திருமூர்த்திமலையில் பெய்யும் மழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் காண்டூர் கால்வாய் வழியாக அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து இருந்தது. அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் எந்நேரமும்அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளது.

    இன்று 2-வது நாளாக வெள்ள நீர் ஆர்ப்பரித்து வருவதால் அருவி மற்றும் கோவிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×