search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. அது அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    நாளை (31-ந்தேதி) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி- மின்னலுடன் கன முதல் மிக கனமழைக்கான “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

    மழை


    1-ந்தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    2 மற்றும் 3-ந்தேதிகளில் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன மழையும், வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டம் 18 செ.மீ., பரங்கிபேட்டை, தூத்துக்குடி தலா 17, புதுச்சேரி 14, ஒட்டப்பிடாரம், திண்டிவனம் தலா 13, காரைக்கால் 11, செஞ்சி, எண்ணூர் தலா 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×