search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதை பொருட்களை கண்டறிவதற்காக வாங்கப்பட்டு உள்ள நாய்க்குட்டியை காணலாம்
    X
    போதை பொருட்களை கண்டறிவதற்காக வாங்கப்பட்டு உள்ள நாய்க்குட்டியை காணலாம்

    போதை பொருட்களை கண்டறிய 3 மோப்ப நாய்களுக்கு பயிற்சி

    கோவை மோப்ப நாய் பயிற்சி மையத்தில் தமிழகத்தில் முதல் முறையாக போதை பொருட்களை கண்டறிய 3 நாய் குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    கோவை:

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மோப்ப நாய் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி அளிக்கப்படும் ஜெர்மன் செப்பேர்டு மற்றும் லேபரடார் வகை நாய்களை வெடி குண்டுகளை கண்டறிதல், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. இந்த மையத்தில் இதற்காக மோப்ப நாய்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் போதை பொருட்களை கண்டறிய மோப்ப நாய்கள் இதுவரை இல்லை. இதன்காரணமாக போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கண்டறிய முடிவதில்லை. பஸ்கள், ரெயில்கள், லாரிகளில் வரும் சரக்குகளை போலீசார் திறந்து பார்த்த பின்னரே அதில் கஞ்சா உள்ளதா? என கண்டறிய முடிகிறது. இதனை தவிர்க்கும் வகையில் எளிதாக போதை பொருட்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதல் முறையாக போதை பொருட்களை கண்டறிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதற்காக குன்னூரில் இருந்து 3 லேபரடார் வகை நாய்க்குட்டிகள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த நாய்க்குட்டிகள் முறையே கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் போதைப்பொருட்கள் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. தற்போது அந்த நாய்களுக்கு கட்டளைகளுக்கு கீழ்படிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 3 நாய்க்குட்டிகளுக்கும் முறையே டைகர் (கோவை), பாண்ட் (திருச்சி), பாண்டி (மதுரை) என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

    தற்போது வாங்கப்பட்டு உள்ள இந்த நாய்க்குட்டிகள் பிறந்து 2 மாதங்களே ஆகியுள்ளது. எனவே நாய்க்குட்டிகளின் 9-வது மாதத்தில் போதை பொருட்களை கண்டறிவது குறித்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மூலம் கஞ்சா கடத்தலை எளிதில் தடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×