search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வருமான வரி அதிகாரிகள் போல நடித்து பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தி.மு.க. நிர்வாகியிடம் வருமான வரி அதிகாரிகள் போல நடித்து பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் (வயது 50). இவர் தி.மு.க. வர்த்தக அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் இவர் பல்வேறு வணிகம் செய்துவருகிறார்.

    இந்நிலையில் நேற்று கருப்பண்ணனை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நாங்கள் வருமானவரித்துறை அலுவலர்கள். நீங்கள் வருமானத்திற்கு அதிகமான அளவில் சொத்து சேர்த்துள்ளீர்கள். எனவே உங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் சோதனை நடைபெற உள்ளது என மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர். வருமானவரி சோதனையினை தவிர்க்க வேண்டுமானால் உங்களது ஆடிட்டரை பேச சொல்லுங்கள் என கூறி இணைப்பினை துண்டித்துள்ளனர்.

    இந்த நிலையில் சற்று நேரத்திற்கு பின் மீண்டும் கருப்பண்ணனை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் இன்னும் சற்று நேரத்தில் உங்கள் வீட்டில் சோதனை நடத்த வருமான வரி அலுவலர்கள் வர உள்ளனர். சோதனையினை தவிர்க்க விரும்பினால் குறிப்பிட்ட ஒரு தொகையினை சேலத்துக்கு கொண்டுவரும்படி மிரட்டல் தொனியில் கூறியுள்ளனர். இதனால் கருப்பண்ணனுக்கு போனில் பேசிய நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து தனது ஆடிட்டரிடம் கருப்பண்ணன் தகவல் தெரிவித்தார். பின்பு பூலாம்பட்டி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். கருப்பண்ணன் போலீஸ் நிலையத்தில் இருந்தபோதே, மர்ம நபர்கள் மீண்டும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த செல்போன் அழைப்பினை பரிசோதித்த போலீசார் சம்மந்தப்பட்ட நபர் சேலம் நகரப்பகுதியில் இருந்து பேசுவதை கண்டறிந்தனர்.

    இதனை அடுத்து போலீசாரின் ஆலோசனைப்படி கருப்பண்ணன் ஒரு காரில் தனியாகவும், அவரை பின் தொடர்ந்து மாறு வேடத்தில் மற்றொரு வாகனத்தில் தனிப்படை போலீசாரும், மர்ம நபர்கள் கூறிய இடத்திற்கு சென்றனர்.

    இந்த நிலையில் மீண்டும் கருப்பண்ணனை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், கொண்டலாம்பட்டி, திருவாக்கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வரச்சொல்லி அலைக்கழித்துள்ளனர். பின்பு சேலம் 5 ரோடு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் நிற்கும்படி கூறியுள்ளனர். மர்ம நபர்கள் கூறிய இடத்தில் கருப்பண்ணன் பணத்துடன் தனது காரில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கருப்பண்ணனை நெருங்கி வந்து பணம் கொண்டுவந்துள்ளீர்களா என கேட்டுள்ளார். அதற்கு ஆமாம் என கூறிய கருப்பண்ணன் மர்ம நபரிடம் வெளியில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளது எனவே காருக்குள் வந்து அமர்ந்து பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய மர்ம நபர் கருப்பண்ணனின் காரில் ஏறிஅமர்ந்துள்ளார். அப்போது கருப்பண்ணன் மர்மநபரிடம் நீங்கள் கேட்டதொகையினை என்னால் உடனடியாக தயார் செய்ய முடியவில்லை எனவே கொஞ்சம் குறைவாக கேட்குமாறு பேரம் பேசி நேரத்தை கடத்தியுள்ளார். இந்த வேளையில் மாறுவேடத்தில் அங்கு மறைந்திருந்த போலீசார் மர்ம நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர் பிடிபட்டதும், பெட்ரோல் பங்கில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் வேகமாக தனது இருசக்கரவாகனத்தினை எடுத்துச்செல்ல முன்றார்.

    இதை கண்ட போலீசார், அந்த வாலிபரையும் பிடித்தனர். பின்பு 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஓமலூர் அருகே உள்ள பெரியஏரிப்பட்டி, பாலிக்காடு பகுதியை சேர்ந்த மணி (எ) மணிகண்டன் (32) மற்றும் தாரமங்கலம் அருகில் உள்ள குப்பனூர் பகுதியை சேர்ந்த தங்கதுரை (31) என்பதும் தெரியவந்தது. இதில் மணிகண்டன் எம்.சி.ஏ பட்டதாரி ஆவார். குறுக்குவழியில் எளிதாக பணம் சம்பாதிக்கும் நோக்கில், வருமானவரித்துறை அலுவலர்கள் என செல்போனில் மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்றதாக கைதான 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து அவர்களை கைது செய்த பூலாம்பட்டி போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×