search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதர் மண்டி கிடக்கும் நீலம்பூர் கால்வாய் பாலம் - வாகன ஓட்டிகள் அவதி

    பாலம் துவங்கும் இடத்தில் ஒரு பகுதியில் புதர் முளைத்து காணப்படுகிறது. நீண்ட காலமாக அகற்றப்படாததால், புதரானது பாலத்தின் ஓடுதளத்தில் ஒரு பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டது.
    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்டது மேற்கு மற்றும் கிழக்கு நீலம்பூர் கிராமங்கள். அமராவதி ஆயக்கட்டு பாசனத்தில் இப்பகுதி விளைநிலங்கள் பயன்பெறுகின்றன. 

    விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில் நெல் வயல்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழை நீர் செல்வதற்கான சிறிய மண் கால்வாய் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு நீலம்பூர் கிராமங்களை இணைப்பதற்கான இணைப்பு சாலையில் இந்த கால்வாய் குறுக்கிடுகிறது. அங்கு போக்குவரத்துக்காக தரைமட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளது. 

    போதிய பராமரிப்பு இல்லாமல் தற்போது அப்பாலம் ஒற்றையடிப் பாதையாகி பயன்படுத்த முடியாத நிலையை நோக்கி செல்கிறது. பாலம் துவங்கும் இடத்தில் ஒரு பகுதியில் புதர் முளைத்து காணப்படுகிறது.

    நீண்ட காலமாக அகற்றப்படாததால், புதரானது பாலத்தின் ஓடுதளத்தில் ஒரு பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டது. இதனால் பாலத்தின் ஓடுதளம் குறுகலாகி வாகனங்கள் விலகி செல்ல முடிவதில்லை. 

    விளைநிலங்களுக்கு இடுபொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களும், விளைபொருட்களை சந்தைப்படுத்த எடுத்து வரும் போதும் ஒவ்வொரு வாகனமாக பாலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்த பகுதியில் போதிய தெருவிளக்கு வசதியும் இல்லை. 

    இரவு நேரம் இந்த பாலத்தை கடந்து செல்ல அச்சமாக உள்ளது. பாலம் பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்லும் முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இல்லாவிட்டால் இரு கிராமங்களுக்கும் இடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் பல கி.மீ., தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  
    Next Story
    ×