search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாக வேள்வியில் பங்கேற்றவர்கள்.
    X
    யாக வேள்வியில் பங்கேற்றவர்கள்.

    100 நாள் திட்ட தொழிலாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த கோரி கோர்ட்டில் வழக்கு - உழவர் உழைப்பாளர் கட்சி அறிவிப்பு

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை அமல்படுத்துவதால், கிராமப்புறங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகம் உழவலாயத்தில், உலக விவசாயிகள் நலன் பெற வேண்டி சிறப்பு யாக வேள்வி நடைபெற்றது. மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். 

    சட்டமன்ற உறுப்பினர்கள் எம். எஸ். எம் ஆனந்தன், (பல்லடம்), கந்தசாமி (சூலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் வரவேற்றார். யாக வேள்வியை கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் மற்றும் குழுவினர் நடத்தினர். 

    இதில் கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் காவீ.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.தனியரசு, உழவர் உழைப்பாளர் கட்சி மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து  நிருபர்களிடம் கூறியதாவது:

    உலகம் முழுவதும் வேளாண்மை தொழிலில் விவசாயிகள் அதிக லாபத்துடன் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக ஐப்பசி மாத அன்னாபிசேகம் அன்று யாக வேள்வி நடத்தப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு என்று தனியாக பட்ஜெட் போட்டு விவசாயிகளுக்கான அரசு என்று காட்டிக் கொண்டு போலி நாடகம் நடைபெற்று வருகிறது. 

    தமிழகத்தில் விவசாயிகள் முன்னேற்றம் அடையவில்லை. மக்காசோளம், முருங்கை, பாகற்காய், கத்திரி, வெங்காயம் போன்றவற்றில் போலி விதைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

    தற்போது பயிர்கள் விதைக்கும் பருவகாலம் என்பதால், வேளாண்மை பல்கலைக்கழகம், விதைக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தரமான விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை அமல்படுத்துவதால், கிராமப்புறங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளது. ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் பலர் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். 

    இதனால் பயிரிடும் விவசாய நிலங்களின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க, அந்த திட்ட பயனாளிகளை விவசாய பணிக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டமானது. விவசாய பணி இல்லாத காலத்தில் மற்ற பணிக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்று தான் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் திட்ட நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. 

    இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நாட்டில் உணவு பஞ்சம் வராது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×