search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    15 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

    மணல் இறக்குமதியையும், எம். சாண்ட் உற்பத்தியையும் அதிகரித்து கட்டுமானத்திற்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மணல் குவாரிகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் மணல் குவாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, இப்போது ஒட்டுமொத்தமாகவே 7 ஆற்று மணல் குவாரிகள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன.

    மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிடக்கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போதும் நடத்தி வருகிறார்.

    அரசியல் ரீதியாகவும், சட்டப்படியும் போராடி மூடப்பட்ட மணல் குவாரிகளை யாரோ சிலரின் லாபத்துக்காக மீண்டும் திறக்கக்கூடாது. அவ்வாறு திறப்பது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெருங்கேடு விளைவித்து விடும்.

    காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குவாரிகள் அமைத்து 60 அடி ஆழம் வரை மணல் தோண்டி எடுக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குள் கடல் நீர் ஊடுருவி விட்டது. பல ஆயிரக்கணக்கான கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாசன நீர் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

    மணல் கொள்ளையால் ஆற்றுமட்டம் குறைந்து, அதில் எவ்வளவு நீர் ஓடினாலும் பாசனக் கால்வாய்களில் நீர் பாய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இவை உள்ளிட்ட ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதென்பது பெரும் தீமையாகும்.

    ஆற்று மணல் குவாரிகளை திறப்பதால் அரசுக்கு பொருளாதார ரீதியாகவும் எந்த பயனும் கிடைக்காது. 2003-ஆண்டு ஆற்று மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தத் தொடங்கியதில் இருந்து இன்று வரை பெரும்பாலான ஆண்டுகளில் மணல் விற்பனை மூலம் அரசுக்கு சராசரியாக ரூ. 80 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.

    மாறாக இடைத்தரகர்கள் தான் பல்லாயிரக்கணக்கான கோடி லாபம் பார்க்கின்றனர். ரூ.80 கோடி லாபத்திற்காக விலைமதிப்பற்ற சுற்றுச்சூழலை அழித்து விடக்கூடாது. மாறாக, மணல் இறக்குமதியை ஊக்குவிப்பதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய், கட்டுமானத்திற்கு தடையற்ற மணல் வினியோகம் ஆகியவற்றுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

    எனவே, மணல் இறக்குமதியை நிறுத்தி விட்டு, 15 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழகத்தின் ஆறுகளில் 5 கி.மீக்கு ஒரு தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த வேண்டும். மணல் இறக்குமதியையும், எம். சாண்ட் உற்பத்தியையும் அதிகரித்து கட்டுமானத்திற்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×