search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போலி எஸ்.எம்.எஸ்., தகவல்களை அனுப்பி திருப்பூரில் பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபடும் கும்பல்

    ஆன்லைன் மோசடி கும்பல் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் சற்று உஷாராக இருக்க வேண்டும்.
    திருப்பூர்:

    தொழில் நகரமான திருப்பூரில் ஆன்லைன் மூலம் பல்வேறு பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு ஆன்லைன் மூலம் சம்பளம் உள்ளிட்டவை வங்கியில் செலுத்தப்படுகிறது. 

    மேலும் தொழிலாளர்களுக்கு ஆன்லைன் மூலம் தங்களது வங்கி கணக்கில் இருந்து மற்ற வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்கின்றனர். லோன் உள்ளிட்டவையும் பெற்று வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ஆன்லைன் மூலம் பல்வேறு பண மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

    குறிப்பாக வங்கி கணக்கு வைத்துள்ளவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வரப்படுகிறது. அதில் வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும். கடன் பெற்று கொள்ளலாம் என பல்வேறு தகவல்களை அனுப்புகின்றனர். 

    அதற்காக ஒரு லிங்க்கையும் அனுப்புகின்றனர். அதில் சென்று தங்களது சேவையை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குறுந்தகவல்களை மோசடி கும்பல் அனுப்பி வருகிறது. அதனை நம்பி பலர் லிங்க்கை கிளிக் செய்து அதில் ஆதார் எண், முகவரி உள்ளிட்டவற்றை அப்டேட் செய்கின்றனர். 

    அதனை அப்டேட் செய்த சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ். தகவல்கள் செல்போனுக்கு வருகிறது. 

    இதையடுத்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று கேட்கும் போது அது போன்ற தகவல்கள் வங்கியில் இருந்து அனுப்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கவே, அதன் பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் உணருகின்றனர். 

    இதுபோன்று திருப்பூர் மாவட்டத்தில் 17க்கும் மேற்பட்டோரிடம் போலி எஸ்.எம்.எஸ். தகவல்களை அனுப்பி கும்பல் பணமோசடி செய்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டதையடுத்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபடும் கும்பல் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ஏற்கனவே வங்கி நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் ஆன்லைன் பண மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் மோசடி கும்பலிடம் ஏமாந்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:

    ஆன்லைன் மோசடி கும்பல் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் சற்று உஷாராக இருக்க வேண்டும். சில கும்பல்கள் வங்கி ஏ.டி.எம். பின் நம்பரை கூறுங்கள் என்று கேட்கின்றனர். அதனையும் சிலர் கூறி விடுகின்றனர்.

    குறிப்பாக வயதானவர்களை குறிவைத்து கும்பல் செயல்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. திருப்பூரில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பலரிடம் ஆசை வார்த்தைகள் கூறியும், எஸ்.எம்.எஸ்.தகவல்கள் அனுப்பியும் பணமோசடியில் கும்பல் ஈடுபட்டு வருகிறது.
     
    எதுவாக இருந்தாலும் தற்போது வங்கிக்கு சென்றே அனைத்தையும் சரி செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக  விழப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்க உள்ளோம் என்றனர். 
    Next Story
    ×