search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை உயர்நீதிமன்றம்
    X
    சென்னை உயர்நீதிமன்றம்

    விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு எடுக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

    தழிழக அரசின் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக விஜயதசமி அன்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க.-வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே கோவில்கள் வார இறுதி நாட்களில் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் கோவில்களில் கூட்டம் அதிகமாக கூடும். எனவே, வாரத்தின் கடைசி மூன்று நாட்கள் கோவில்களில் வழிபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் தாராளமாக மக்கள் கோவில்களுக்கு செல்லலாம். மேலும், கொரோனா தொற்று நம்மை விட்டு நீங்கியவுடன் நிச்சயமாக கோவில்களை திறக்க முதல்வர் அனுமதி அளிப்பார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உறுதி அளித்துள்ளார்.

    இந்த நிலையில், வருகிற 15-ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களைத் திறக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை பீளமேட்டை சேர்ந்த சேர்ந்த ஆர். பொன்னுசாமி கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், “ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமெனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15-ம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தினம் கோவில்களைத் திறக்க உத்தரவிட  வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜயதசமி அன்று கோவில்களை திறப்பதில் தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×