search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 8.27 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன- கலெக்டர் தகவல்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் உட்பட 8 லட்சத்து 27 ஆயிரத்து 398 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) காமாட்சி கணேசன், நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் சுகாதாரத்துறை மூலம் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் உட்பட 8 லட்சத்து 27 ஆயிரத்து 398 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    கொரோனா தடுப்பூசி பணியை தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அனைவரும் பயன்பெறும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாமை இதுவரை 4 தவணைகளாக நடத்தி உள்ளது.

    இந்த முகாம்களின் மூலம் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவ குழுவின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 815 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    நாளை (ஞாயிறு) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தற்சமயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இவற்றில் 72 ஆயிரத்து 900 கோவிஷீல்டு, 7 ஆயிரத்து 100 கோவேக்சின் தடுப்பூசி ஆகும்.

    தடுப்பூசி பணிகளின் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுபரவல் வெகுவாக குறைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மே-2021 முதல் ஜூலை-2021 வரை 8219 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    இது கடந்த 2 மாதங்களில் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 200 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளது.

    தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் நோயின் தீவிரம் மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மே-2021 முதல் ஜுலை-2021 வரை 204 நபர்கள் கொரோனா தொற்றினால் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் கடந்த 2 மாதங்களில் கொரோனா நோய் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.

    கடந்த 2 மாதங்களில், 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் தேவை ஏற்படவில்லை. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை மிகவும் குறைவாக ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன் பெற்றோர், குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது என்ற நிலையையும், கொரோனா உயிரிழப்பே இல்லை என்ற நிலையையும் உருவாக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    நாளை (10-ந் தேதி) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும், 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரவீந்திரன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×