search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    கொலை வழக்கில் கடலூர் எம்.பி.யை உடனே கைது செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

    கடலூர் எம்.பி செய்த குற்றங்கள் என்னென்ன? என்பதை அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரிவுகளே காட்டுகின்றன என ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள, கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி கொடூரமான முறையில் அடித்து, கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட வழக்கில், ரமேசின் உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கோவிந்தராசு கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் விசாரணை இதுவரை ஐயத்திற்கு இடமின்றி சென்று கொண்டிருக்கிறது. வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், இந்த வழக்கின் முதன்மை எதிரியான (ஏ1) கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷ் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்? என்பதுதான் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. அவர் கைது செய்யப்படுவதில் செய்யப்படும் தாமதம் இவ்வழக்கின் விசாரணையை பாதிக்கும்.

    கோவிந்தராசு கொலை தொடர்பாக கடந்த மாதம் 20-ந் தேதி கடலூர் எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்த இரு நாட்களில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்போதிலிருந்து அவர் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தில் தான் வைக்கப்பட்டிருந்திருப்பார். அதனால் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அத்தகைய சூழலில் கொலை வழக்கின் முதன்மை எதிரியான ரமேஷை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை. முதன்மை எதிரியை கைது செய்யாமல் அவரது உதவியாளர்களை மட்டும் கைது செய்வதால் பயனில்லை.

    கடலூர் எம்.பி.

    கடலூர் எம்.பி ரமேஷ் செய்த குற்றங்கள் என்னென்ன? என்பதை அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரிவுகளே காட்டுகின்றன. தொழிலாளி கோவிந்தராசுவை கடத்திச் சென்று அடைத்து வைத்தல் (இ.த.ச. 341), கொலை (இ.த.ச. 302), வன்முறையை பிரயோகித்தல் (இ.த.ச. 147), குற்றம் செய்யும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக கூடுதல் (இ.த.ச. 149) ஆகியவற்றுடன் கூட்டுச்சதி (இ.த.ச. 120 பி), சாட்சியங்களை அழித்தல் (இ.த.ச. 201) ஆகிய பிரிவுகளில் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிந்தராசு கொல்லப்பட்ட பிறகு அவர் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் ரமேஷ், இனியும் கைது செய்யப்படாமல் இருந்தால் வழக்கின் சாட்சியங்களை அழித்து விடுவார். எனவே, இனியும் தாமதிக்காமல் கடலூர் மக்களவை உறுப்பினரை சி.பி.சி.ஐ.டி உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...ஏழை பெண்களின் திருமணத்திற்காக தொடங்கப்பட்ட இலவச ஆடை வங்கி

    Next Story
    ×