search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நீண்ட நேரம் செல்போனில் பேசியதை தட்டிக்கேட்ட கணவரை கத்தியால் குத்திய மனைவி

    குடும்ப பிரச்சனை ஏற்பட்ட இருவரும், ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையங்களில் புகார் அளித்த நிலையில், அது குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த மசையன்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது27). விசைத்தறி கூலி தொழிலாளியான இவர், நடன நாட்டிய நிகழ்ச்சிகளை காண்பதில் ஆர்வம் உடையவர் என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி அருகே நடைபெற்ற ஒரு நடன நாட்டிய நிகழ்ச்சியை காண்பதற்காக பாலமுருகன் தனது நண்பர்களுடன் சென்றார்.

    அங்கு பெண் நடன கலைஞர்களுக்கு ஒப்பனை செய்திடும் பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் பாரிஸ் நகரை சேர்ந்த இலக்கியா(24) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர்களின் நட்பு காதலாக மாறவே இருவேறு சமூகத்தை சேர்ந்த அவர்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் எடப்பாடி அடுத்த ஆவணிப் பேரூர் கீழ்முகம் பகுதியில் ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்திவந்தனர். இவர்களுக்கு 7 மாத கைக்குழந்தை உள்ளது.

    இதனிடையே நடன நாட்டிய குழுவிலிருந்த இலக்கியாவிற்கு அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் வட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இலக்கியா தனது நண்பர்களிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டு இருந்துள்ளார். ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பாலமுருகன், தொடர்ந்து இலக்கியா நீண்ட நேரம் செல்போனில் பேசுவது பிடிக்காமல் அவருடன் சில சமயங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இலக்கியா நள்ளிரவை தாண்டியும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப பிரச்சனை ஏற்பட்ட தம்பதிகள் இருவரும், ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையங்களில் புகார் அளித்த நிலையில், அது குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இதனால் இலக்கியா கைக்குழந்தையுடன் கிருஷ்ணகிரியில் உள்ள தாயார் வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் தனது கணவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து இனி மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்கலாம் எனவும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை திரும்பப் பெற்று இனி இருவரும் சமாதானமாக வாழ்வது என முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து எடப்பாடி அருகே உள்ள தனது கணவர் வீட்டிற்கு வந்த இலக்கியா அங்கு தனது கணவருடன் குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வரை இலக்கியா தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இலக்கியா சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து பாலமுருகன் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பாலமுருகன் அவரிடமிருந்து தப்பி ஓடியுள்ளார்.

    பாலமுருகனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டிலிருந்த பாலமுருகனின் தாயார் ஜோதி அங்கு வந்துள்ளார். அங்கு கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் நின்ற மருமகள் இலக்கியாவின் கையில் இருந்த கத்தியை ஜோதி பிடுங்க முயற்சித்தார். அப்போது இலக்கியா ஜோதியின் கையை கடித்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பாலமுருகன் மற்றும் அவரது தாயார் ஜோதியை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி போலீசார், கணவரை கத்தியால் குத்திய இலக்கியாவை கைது செய்து கைக்குழந்தையுடன் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×