search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    21 வயது வாலிபருடன் குடும்பம் நடத்திய 43 வயது பெண் - 7 மாதங்களுக்கு பிறகு திருச்சியில் மீட்பு

    கணவர் மற்றும் வாலிப வயது மகன்-மகளை விட்டு விட்டு 21 வயது வாலிபருடன் 43 வயது பெண் குடும்பம் நடத்திய விவகாரம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் காந்திநகரை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி திடீரென மாயமானார். இது குறித்து அந்த வாலிபரின் தந்தை ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. அந்த பெண் மாயமானது தொடர்பாக அவரது குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்தனர்.

    வாலிபர் மற்றும் பெண் மாயமானதாக வந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 21 வயது வாலிபர் மற்றும் 43 வயது பெண் ஆகிய இருவரும் சேர்ந்து மாயமாகியிருப்பது தெரியவந்தது.

    தன்னைவிட 22 வயது குறைவான வாலிபரை அழைத்துச்சென்ற அந்த பெண்ணுக்கு வாலிப வயதில் மகள் மற்றும் மகன் உள்ளனர். வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்த இருவரும் எங்கு சென்றார்கள்? என்று போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர்களை பற்றி பல மாதங்களாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அந்த வாலிபரும், பெண்ணும் திருச்சியில் தங்கி குடும்பம் நடத்தி வருவதாக ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் திருச்சிக்கு சென்றனர். அங்கு வாலிபர் மற்றும் பெண் இருக்கும் வீட்டிற்கு அதிரடியாக சென்றனர். அங்கு இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

    21 வயது வாலிபர் மற்றும் 43 வயது பெண் ஆகிய இருவரின் வீடும் ஒரே பகுதியில் இருக்கின்றன. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து இருவரும் தனியாக சென்று குடும்பம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் திருச்சியில் இருக்கும் தகவல் 7 மாதங்களுக்கு பிறகு தற்போது தெரியவந்தது. இதையடுத்தே போலீசார் திருச்சிக்கு விரைந்து இருவரையும் கண்டுபிடித்தனர். வாலிபர் மற்றும் பெண் ஆகிய இருவரையும் போலீசார் திருச்சியில் இருந்து ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அவர்கள் மீட்கப்பட்டது குறித்து இருவருடைய குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வாலிபரின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் வாலிபர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இதனால் அவர் நாகர்கோவில் சுங்கான்கடை அருகே உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

    இருவரும் மாயமானது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு இருப்பதால், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வாலிபரும், பெண்ணும் நாகர்கோவில் கோர்ட்டில் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

    கணவர் மற்றும் வாலிப வயது மகன்-மகளை விட்டு விட்டு வீட்டைவிட்டு வெளியேறி, 21 வயது வாலிபருடன் 43 வயது பெண் குடும்பம் நடத்திய விவகாரம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×