search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிதலமடைந்து கிடக்கும் கோவில்வழி சிவன் கோவில் சீரமைக்கப்படுமா?

    சவுந்திரவல்லி, உகந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர், விநாயகர் என தனித்தனி சன்னதிகளுடன் கோவில் வளாகம் அமைந்துள்ளது.
    திருப்பூர்:

    கொங்கு நாட்டின் 24 உட்பிரிவு நாடுகளில் ஒன்றாக விளங்கும் பொன்குலுக்கி நாட்டில் பெரும்பண்ணையில் சிவபெருமானும், பெருமாளும் அருகருகே கோவிலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 

    தற்போது திருப்பூர் கோவில்வழி எனப்படும் அப்பகுதியில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சிவாலயம் இன்று பரிதாபத்திற்கு உரியதாக சிதிலமடைந்து காணப்படுகிறது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன், செங்கல், சாந்து கலவையில் விமானம் அமைத்து கருங்கல் திருப்பணி செய்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. 

    சவுந்திரவல்லி, உகந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர், விநாயகர் என தனித்தனி சன்னதிகளுடன் கோவில் வளாகம் அமைந்துள்ளது. தற்போது பெரும்பாலான பகுதி சிதிலமடைந்து  பொலிவிழந்து காணப்படுகிறது. 

    சிவலிங்கம் மட்டுமே சிதிலமின்றி கிடைத்துள்ளது. பக்தர்களின் பெரும் முயற்சியால் கடந்த 2005 முதல் உகந்தீஸ்வரருக்கு மட்டும் பூஜை நடந்து வருகிறது. மூன்றடி பீடத்தின் மீது மூன்றடி உயரமுள்ள லிங்கமாக பெருவுடையார் உகந்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

    சிறப்புற வழிபாடு நடந்த இக்கோவிலில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டுள்ளதாகவும் இறைவனின் பேரருள் பெற்றுள்ளதாகவும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோவில் அர்ச்சகர் மருதாசல குருக்கள் கூறியதாவது:

    ஈக்கள் முதல் ஈஸ்வரி வரையிலானவர் வழிபட்டு உகந்தீஸ்வரரின் பேரருளை பெற்றுள்ளதற்கான சான்றுகள் உள்ளன. கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த காலத்தில் விராடதேசத்தில் தஞ்சம் புகுந்திருந்த பஞ்ச பாண்டவர்கள் உகந்தீஸ்வரரை வழிபட்டுள்ளனர்.

    கோவிலில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள பரமனூத்து பகுதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளதாகவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    பெரும் கீர்த்தி பெற்று விளங்கிய சிவாலயம் இன்று பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. பெரும்பண்ணையை சேர்ந்த மக்களும், பக்தர்களும், கோவில் திருப்பணிக்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். 

    பெரும்பண்ணை வரதராஜபெருமாள் கோவிலை போல் உகந்தீஸ்வரர் கோவில் திருப்பணியை செய்ய இறையருள் பெற்ற அனைவரும் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×