search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்த காட்சி.
    X
    திருப்பூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்த காட்சி.

    தமிழகத்தில் 56 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது-திருப்பூரில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

    1 வருடங்களாக பள்ளிக்கு செல்லாமல் மன அழுத்தத்தில் இருந்த மாணவர்கள் தற்போது மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர். அதிக பாதிப்பு இருப்பதாக பீதியை ஏற்படுத்த வேண்டாம் என அமைச்சர் தெரிவித்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று 672 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது.

    மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகம், ரெயில் நிலையம், பஸ் நிலையம், சுங்கச்சாவடி மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் முகாம் நடைபெற்றது.

    தடுப்பூசி பணியில் பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், தன்னார்வலர் என 2,688 பேர் ஈடுபட்டனர். ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி இணையதளத்தில் பதிவு செய்ய வசதியாக தன்னார்வ இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் செல்போன் வாயிலாக பதிவு பணியை மேற்கொண்டனர்.

    சிறப்பு தடுப்பூசி முகாமில் 76,821 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை  தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு முகாமை சாதுரியமாக பயன்படுத்தி சிறப்பான முறையில் அதிக நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளனர். திருப்பூரில் இதுவரை 13 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் 67 சதவீதம் பேர் முதல் தவணையும், 13 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும் செலுத்தி உள்ளனர். தமிழக அளவில் 56 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசியின் மருந்து அளவு குறைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் வேண்டாம். 5மில்லி என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி செலுத்தப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் கொரோனா தொற்று என்பது பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் குறைவாகவே இருந்து வருகிறது.1 வருடங்களாக பள்ளிக்கு செல்லாமல் மன அழுத்தத்தில் இருந்த மாணவர்கள் தற்போது மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர். அதிக பாதிப்பு இருப்பதாக பீதியை ஏற்படுத்த வேண்டாம்.

    கோவாக்சின் தடுப்பூசி குறைவான அளவே வந்து கொண்டிருப்பதால் முதல் தவணை நிறுத்தப்பட்டு இரண்டாம் தவணை தேவைப்படுபவர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு  மட்டுமே 18 லட்சம் தேவைப்படுகிறது.

    பொதுமக்களிடம் தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர். முன்னதாக பல்லடத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    Next Story
    ×