search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றபோது எடுத்த படம்.

    விழுப்புரம் ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணி - சாலை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

    விழுப்புரம் ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதனால் முன்அறிவிப்பின்றி சாலை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம்- காட்பாடி ரெயில்வே மார்க்கத்தில் தினமும் விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலும், வாரந்தோறும் திங்கள், புதன்கிழமைகளில் மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரசும், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் ராமேஸ்வரம்- திருப்பதி எக்ஸ்பிரசும், ஞாயிறு, செவ்வாய், புதன்கிழமைகளில் புதுச்சேரி- தாதர் எக்ஸ்பிரசும், புதன்கிழமை புதுச்சேரி-ஹவுரா எக்ஸ்பிரசும், சனிக்கிழமை விழுப்புரம்- கரக்பூர் எக்ஸ்பிரசும், செவ்வாய், புதன்கிழமைகளில் விழுப்புரம்-புருலியா எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சென்று வருகின்றன.

    இந்நிலையில் இந்த ரெயில்வே மார்க்கத்தில் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் நேற்று பகல் 12 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கியது. இதற்காக அந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. தொடர்ந்து, அங்கு 10-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள சாலை பள்ளமாக இருப்பதை சரிசெய்து சமப்படுத்தியதோடு பழைய ஜல்லிக்கற்கள், சிலிப்பர் கட்டைகளை அகற்றிவிட்டு புதியதாக ஜல்லிக்கற்கள் போட்டு சிலிப்பர் கட்டைகளை மாற்றியமைத்தனர். இப்பணிகள் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

    ஆனால் இந்த பணிகளை மேற்கொள்வது குறித்து ஏற்கனவே முன்அறிவிப்பு செய்யாமல் திடீரென ரெயில்வே கேட்டை மூடிவிட்டு பராமரிப்பு பணிகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. இதன் காரணமாக விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த வாகன ஓட்டிகள் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து ரெயில்வே ஊழியர்களிடம் சென்று முன்அறிவிப்பின்றி ரெயில்வே கேட்டை மூடி ஏன் பணியை மேற்கொள்கிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர்.

    இதுகுறித்து அவர்கள், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று வாகன ஓட்டிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வாகன போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் மார்க்கம் செல்லும் வாகன போக்குவரத்து விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம், செஞ்சி சாலை, பூத்தமேடு, கெடார், காணை வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 15 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு சென்றனர்.

    ரெயில்வே பராமரிப்பு பணிகள் மாலை 4 மணிக்கு முடிந்ததும் அந்த கேட் திறக்கப்பட்டது. அதன் பிறகு வாகன போக்குவரத்து சீரானது. இப்பணிகள் நடைபெற்ற சமயத்தில் விழுப்புரம்- காட்பாடி மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து இல்லாததால் ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் இதுபோன்று ரெயில்வே கேட் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும்போது முன்அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும், பணிகளை இரவு நேரத்தில் மேற்கொள்ளும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×